அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

19 0

அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 3 பேரின் உடல்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ஒருவர் பலியானார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லே நகரில் உலகின் முன்னணி இணைய வழி வணிக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் கிடங்கு உள்ளது.

அமேசான் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான ஏராளமான இளைஞர்கள் இங்கு வந்து கிடங்குக்கு வெளியே வரிசையில் காத்திருந்தனர்.

அப்போது அங்கு காரில் வந்த இறங்கிய 2 மர்ம நபர்கள் அமேசான் கிடங்குக்கு வெளியே வரிசையில் நின்று கொண்டிருந்தவளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பீதியும் உருவானது. வரிசையில் நின்றிருந்த அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். ஒரு சிலர் கிடங்குகள் ஓடிச் சென்று மறைந்து கொண்டனர்.

எனினும் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேரின் உடல்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.

அதனைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அவர்கள் வந்த காரிலேயே தப்பி சென்றனர்.

இதற்கிடையில் தாக்குதல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை என்றும் தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

எனினும் இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்றும் தனிநபர்களை குறிவைத்து நடத்தப்பட்டது போலீசார் கூறினர்.