சர்வதேச அரங்கைச் சரியாக கையாளக் கூடிய தரப்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் தான்!

509 0

;தமிழ் அரசியலில் நேர்மையான மாற்று அணி என்பது கடந்த-11 வருடங்களாகத் தங்களை சரியாக வழிநடாத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தமிழ் மக்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காகப் பல தரப்புக்களைத் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள போதிலும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எங்கள் மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர் என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ;இதனால், வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம்  என்றும் கூறுகின்றார்.

நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நேர்காணலின் விபரம் வருமாறு:

கேள்வி:- எதிர்வரும் பொதுத் தேர்தலில் வட- கிழக்கில் பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றமை தொடர்பாக தமிழ் மக்களின் பார்வை எவ்வாறுள்ளதாக கருதுகிறீர்கள்?

பதில்:- தேசியத் தலைவர் காட்டிச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களைச் சரியாக வழிநடாத்தி அரசியல் அபிலாசைகளுக்காகவும் பாடுபடுவார்கள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்கள். ஆனால், 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் தமிழ் மக்கள் முற்றுமுழுதாக ஏமாந்து மாற்று அணியைத் தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தடம்புரண்டு தமிழ் அரசியல் ஒரு பிழையான திசைக்கு கொண்டு செல்லப் போகின்றார்கள் என்ற விடயத்தை நாங்கள் பதவிகளைத் தூக்கியெறிந்து கூட்டமைப்பிலிருந்து வெளியேறி எங்கள் மக்களுக்குத் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்தோம்.

இவ்வாறான சூழலில் எங்கள் தரப்பை எமது மக்கள் ஏற்று அங்கீகரிக்கின்ற நிலை உருவாகியுள்ள நிலையில், அதனைக் குழப்புவதற்காகப் பல்வேறு தரப்புக்களை சிறிலங்கா அரசு மற்றும் தமிழ் அரசியலைப் பாவிக்க விரும்பும் வல்லரசுகள் சேர்ந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறக்கியுள்ளார்கள்.

தமிழ் அரசியலில் நேர்மையான மாற்று அணி என்பது கடந்த-11 வருடங்களாகத் தங்களை சரியாக வழிநடாத்தும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைத் தமிழ் மக்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காகப் பல தரப்புக்களைத் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள போதிலும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எங்கள் மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர். இதனால், வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்களுக்குத் தலைமைத்துவம் வழங்கக் கூடிய வகையில் மிகப் பலமான ஆணையைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்குவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கிருக்கிறது. நாங்களும் தமிழ் மக்களுக்கு விசுவாசமாகச் செயற்பட்டு தற்போது நிலவும் பூகோளப் போட்டித் தன்மைகளைப் பயன்படுத்தி, வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழ்மக்களின் நலன்களுக்காகப் பேரம் பேசி தமிழ் மக்களுக்கான அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராகவிருக்கின்றோம். இதன்மூலம் தமிழ்மக்கள் கணிசமான முன்னேற்றத்தை எதிர்வரும் ஐந்து வருடங்களில் அடைவார்கள் என்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்.

கேள்வி:- இந்த முறை பொதுத் தேர்தலில் வட- கிழக்குப் பகுதிகளில் தென்னிலங்கைக் கட்சிகள் அதிகமாகப் போட்டியிடுவதற்கான காரணம் என்னவெனக் கருதுகிறீர்கள்?

பதில்:- தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த அரசியல் மோசடி நடவடிக்கைகளால் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. அந்த மாற்றுத் தரப்பைத் தமிழ்மக்கள் தேடுகின்ற நிலையில் தென்னிலங்கை கட்சிகள் கூட மக்களுக்கு சலுகைகளை காட்டி, கோடிக் கணக்கில் பணம் கொட்டுவதற்குத் தயாரென போலி நம்பிக்கைகளை மக்களுக்கு கொடுத்து, சரியான தேர்வைச் செய்ய விடாது குழப்புவதற்காக வேறு தெரிவுகளை அடையாளப்படுத்தித் தாங்களும் இலாபம் பெறலாமென நினைக்கிறார்கள்.

எனினும், பொதுத் தேர்தலில் தென்னிலங்கைக் கட்சிகளுக்கு எந்தவிதமான அங்கீகாரத்தையும் தமிழ்மக்கள் வழங்கமாட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. இந்த விடயத்தில் தமிழ்மக்கள் மிகத் தெளிவாகவிருக்கிறார்கள்.

கேள்வி:- கொரோனாவின் பின்னரான சூழ்நிலையில் சாதாரண மக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளமையால் தேர்தலில் அவர்களின் ஆர்வம் எவ்வாறு காணப்படுகிறது?

பதில்:- கொரோனா எனும் ஆபத்தான நிலைமை காணப்படும் சூழலில் இந்த அச்சநிலையையும் தாண்டித் தமிழ்மக்கள் சரியானதொரு முடிவை எடுத்து, சரியானதொரு தலைமைத்துவத்தைத் தேர்வு செய்ய வேண்டுமென்ற ஆர்வம் நிச்சயம் அவர்களிடம் காணப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக நம்பிய நிலையில் தமிழ்மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் எமது இனத்தை அழித்த கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்து வரும் நிலையில் இனியும் தமிழ்மக்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை.

தமிழ் மக்கள் கடந்த-11 ஆண்டுகளாக கூட்டமைப்பை நம்பி வாக்களித்தது போன்று இனியும் தமிழ்மக்கள் வாக்களிப்பார்களேயானால் அதனுடைய விளைவுகள் மிகவும் பாரதூரமாகவிருக்கும் என்பதில் தமிழ்மக்கள் மிகத் தெளிவாகவிருக்கிறார்கள்.

ஆகவே, எங்கள் மக்கள் கொரோனா வைரஸ் நோயையும் தாண்டி, சுகாதார விதிமுறைகளைப் பேணித் தங்கள் வாக்குகளை அளிப்பார்கள். அந்தளவுக்கு ஓர் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக எதிர்வரும் பொதுத் தேர்தல் காணப்படுகிறது.

கேள்வி:- கொரோனாத் தொற்றின் தாக்கம் காரணமாக வட- கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களுக்கு உதவிகள் சரிவரச் சென்றடைந்தது எனக் கருதுகின்றீர்களா?

பதில்:- இலங்கைத் தீவில் சிங்களக் கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் காணப்படும் நிலையில் அவர்கள் எவரும் கொரோனா காலத்தில் தமிழ்மக்களைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஏற்கனவே 30, 35 வருட காலமாகப் போரால் பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியாக மிகவும் பின்னடைந்து காணப்படும் எமது இனம் கொரோனா காரணமாக மேலும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் கொரோனா காரணமாகப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு தமிழ்மக்களைத் தவிர வேறு எவரும் உதவி செய்ய முன்வரவில்லை.

தென்னிலங்கை தரப்புக்களைச் சேர்ந்த எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியதிகாரத்திலிருந்தாலும் கூட தமது ஆட்சியதிகாரத்தை ஓர் இனவாத நோக்குடன் மாத்திரம் தான் பயன்படுத்துவார்கள் என்பது கடந்த காலங்களில் நிரூபணமாகியுள்ளது. கொரோனா காலத்திலும் அவர்கள் தமிழ்மக்களுக்கு உதவிகள் எதனையும் செய்யாதது மூலம் அவர்கள் தங்களை யாரென மீண்டும் உணர வைத்துள்ளனர்.

அதுமாத்திரமன்றி தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் கூட கோரோனா காலமான கடந்த மூன்று மாதங்களாக உழைக்க முடியாத நிலையில் பரிதவித்ததுடன், பட்டினியாலும் வாடிய நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எவரும் தமிழ்மக்களைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இத்தகைய சூழலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் களத்தில் மக்களை நேரில் சென்று சந்திக்க முடியாதளவுக்கு அவர்களின் வெறுப்பைச் சந்தித்துள்ளனர்.

புலம்பெயர் மக்களும் கொரோனாப் பேரிடர் காரணமாக அந்தந்த நாடுகளில் பொருளாதார ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டனர். எவ்வாறாயினும், அவர்கள் தாயகத்திலுள்ள மக்களின் அவல நிலையை நன்கு விளங்கிக் கொண்டு எங்கள் ஊடாக உதவிகள் செய்வதற்கு முன்வந்தனர். இந்நிலையில் தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எங்கள் புலம்பெயர் மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் வடக்கு- கிழக்கு முழுவதும் எங்கள் மக்களுக்கான உதவிகளை வழங்கியிருந்தோம். இது எங்கள் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆகவே, கொரோனா அசாதாரண நிலை எங்கள் மக்களுக்கு இன்னும் தெளிவை, ஓர் கூர்மையான பார்வையை படம் பிடித்துக் காட்டியுள்ளது. தமிழ்மக்களை உண்மையில் யார் நேசிக்கிறார்கள்? என்பதும் இதன்மூலம் தெளிவாகியுள்ளது.

கேள்வி:- தேர்தல் காலங்களில் பலரும் வாக்குறுதிகள் வழங்குகின்றார்கள். அந்த வாக்குறுதிகள் வழங்கும் படலம் தொடர்கின்றமை தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?

பதில்:- ஓர் கொள்கை இல்லாத, ஓர் தெளிவான இலக்கினைக் கொண்டிராத தரப்புக்கள் தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற வேண்டுமாகவிருந்தால் ஏதோவொரு வகையில் மக்களை ஏமாற்றவே குறியாகவிருப்பார்கள்.

கடந்த- 11 வருடங்களாகத் தமிழ்மக்களை ஏமாற்றியவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் என்பது ஒருபுறமிருக்க கூட்டமைப்புத் தவிர்ந்த ஏனைய தரப்புக்களாகவிருப்பவர்களும் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாகவோ, தமிழ்மக்களுக்கு மிகவும் தேவையாகவிருக்கக் கூடிய இனப் படுகொலைக்கான ஓர் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அதனைக் கொண்டு வருவதற்கு ஓர் திட்டமில்லாதவர்களாக காணப்படும் நிலையில் பலவிதமான பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து, மக்களை ஏமாற்றி வாக்களிக்க வைப்பது தான் அவர்களின் நோக்கமாகவிருக்கிறது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிழையான பாதையில் செல்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி பதவிகளைத் தூக்கியெறிந்து விட்டுத் தமிழ்மக்களிடம் நேரடியாகச் சென்று தமிழ்மக்களுக்கு வரப் போகும் ஆபத்துக்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் நாங்கள் சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

எனவே, பொய்யான வாக்குறுதிகள் கொடுக்கக் கூடிய ஏனைய தரப்புக்களுக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நேர்மையான அரசியலுக்குமிடையில் காணப்படும் வித்தியாசத்தையும் எமது மக்கள் நன்கு விளங்கிக் கொண்டு செயற்படுவார்கள் என்பது எங்களின் நம்பிக்கை.

கேள்வி:- தேர்தலுக்குப் பின்னர் தென்னிலங்கை நிலைமை வட- கிழக்கில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துமெனக் கருதுகின்றீர்கள்?

பதில்:- பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அணி தென்னிலங்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுப் புதியதொரு அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான அனைத்துச் செயற்பாடுகளும் திட்டமிட்டுத் தமிழ்த் தேசியத்தை இல்லாமல் செய்கின்ற நோக்கத்துடன் தான் அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

பாராளுமன்ற அரசியலை அல்லது இலங்கையிலுள்ள ஜனநாயக அரசியலை எடுத்து நோக்கினால் சிங்களக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் தனித் தரப்பாகப் பெறும் வாய்ப்பிருந்தால் தமிழ்மக்களுக்கு எந்தவொரு வாய்ப்பும் இலங்கையிலுள்ள அரசியல் நிலைமையில் கிடையாது.

கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்துடன் இணைந்திருந்த நிலையில் பேரம் பேசுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருந்தது. மாதம் தோறும் புதுப் புதுச் சட்டங்கள் நிறைவேற்றவும் கூட்டமைப்பின் ஆதரவு அரசாங்கத்திற்குத் தேவைப்பட்டது.

அதுமாத்திரமன்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே, நான்கரை வருடங்களாகப் பல விடயங்களுக்காக அரசாங்கத்துடன் பேரம் பேசிக் கணிசமான முன்னேற்றங்களைக் கூட்டமைப்புத் தமிழ்மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கலாம்.

எனினும், தற்போதைய நிலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற இலக்கை கோட்டாபய ராஜபக்ச பெறுவாரெனத் தென்னிலங்கையில் பரவலாகப் பேசப்படும் நிலையில் பாராளுமன்றத்தை வைத்துக் கொண்டு நாம் எங்களுக்குரிய பலத்தை ஏற்படுத்த முடியாது.

கோட்டாபய ராஜபக்ச ஓர் இனப்படுகொலையாளி, அவர் தான் எங்கள் இனத்தை அழித்தார் என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தி சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சர்வதேசக் குற்றவியல் தீப்பாயத்திலோ முன்னிலைப்படுத்திப் பொறுப்புக் கூற வைப்பது தான் பேரம் பேசுவதற்கான முக்கிய கருவியாகவுள்ளது.

எனவே, பொறுப்புக் கூறல் தொடர்பில் சர்வதேச அரங்கைச் சரியாக கையாளக் கூடிய தரப்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் தான் காணப்படுகிறது.

நேர்கண்டவர்; ரொஷான் நாகலிங்கம்