யாழில் கைபேசிகளை திருடும் கும்பலுக்கு மறியல்!

219 0

யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரை இன்று (30) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை ஆகிய இடங்களில் வீதியால் பயணித்த இளைஞர்களை வழிமறித்த மூவர், அவர்களிடம் அலைபேசிகளை பறித்துள்ளனர்.

வீதியால் பயணிக்கும் இளைஞர்களை வழிமறிக்கும் கும்பல், அலைபேசியைக் காட்டு என்று மிரட்டுவார்கள். அவர்களில் ஒருவர் எனது தங்கையை ஏன் படம் எடுத்தாய் என்று மிரட்டி அலைபேசியில் உள்ள படங்களை பார்ப்பது போன்று பாசாங்கு காட்டிவிட்டு அவற்றுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மாநகரில் அண்மைக்காலமாக அதிகரித்திருந்த நிலையில் முறைப்பாட்டாளர்களின் தகவலின் அடிப்படையில் 3 பேரின் அலைபேசிகள் நபர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அவற்றை வழிப்பறிக் கும்பல் குறித்த நபருக்கு விற்பனை செய்துள்ளது.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அரியாலையைச் சேர்ந்த இருவரும் இராசாவின்தோட்டம் வீதியைச் சேர்ந்த ஒருவரும் என மூவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்புப் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். அவர்களில் அலைபேசிகளை வாங்கி வைத்திருந்தவருக்கு மன்றினால் பிணை வழங்கப்பட்டது.

ஏனைய மூவரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர். எனினும் அடையாள அணிவகுப்பின்றி தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக சந்தேக நபர்கள் மூவரும் மன்றுரைத்தனர்.

அதனால் சந்தேக நபர்கள் மூவருக்கும் எதிராக குற்றப்பத்திரத்தை நாளை செவ்வாய்க்கிழமை மன்றில் சமர்ப்பிக்க பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் வழங்கிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.