சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும்

22 0

சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யார் மாவட்ட தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா காணாமல் போனவர்களை விடுதலைப் புலிகளே கொன்று விட்டதாக கூறியிருக்கிறார். உண்மையில் இராணுவத்திடம் தங்கள் கைகளால் ஒப்படைத்த பிள்ளைகளை தேடும் பெற்றோர்கள் கணவனை ஒப்படைத்துவிட்டு குங்குமத்துடன் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் தமிழ்மக்களின் மனங்கள் உடைந்து போயிருக்கின்றன. இறுதி யுத்தம் நிறைவுற்ற போது முள்ளிவாய்க்காலில் இருந்து சென்ற வேளையில் வவுனியா ஓமந்தை பகுதியில் இராணுவத்தினால் முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டது. ஒரு நாளாவது விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தால் வந்து சரணடையுமாறு தெரிவிக்கப்பட்டது. இவ் அறிவித்தலை கேட்டு பலர் சரணடைந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே பாலகுமாரன் தனது மகனுடன் சரணடைந்த போது அவர்களைச் சுற்றி இராணுவத்தினர் சூழ்ந்திருக்கும் புகைப்படத்தினை லங்கா கார்டியன் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் தலைமையில் புலித்தேவன் போன்றோர் சரணடைந்திருந்தனர். இவர்கள் சரணடையும் விவகாரத்தில் தொடர்புகளை பேணியிருந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவர் எல்லா சாட்சியங்களையும் வழங்க வேண்டும். இவர்களைத் தவிர தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ராஜா அவரின் மூன்று பிள்ளைகள் அவர்களுடன் பல தளபதிகள் சரணடைந்து இருக்கிறார்கள். இது தொடர்பாக நாம் பல தடவை பாராளுமன்ற கேள்வி எழுப்பியிருக்கிறோம்.

சவேந்திர சில்வாவுக்கே தெரியும் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று. இராணுவத்தின் குறித்த படையணி பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர். இராணுவத்தளபதி கூறியிருப்பதன் விளக்கம் என்ன? இலங்கை அரசு ஐ.நா வில் கூறிய படி நிலைமாறுகால நீதி என்பவற்றுள் அடங்கும் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். மீண்டும் நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். போன்ற விடயங்களில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு உரிய நீதி கிடைக்க சர்வதேசம் உதவ வேண்டும் ; எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்