கிளிநொச்சி வைத்தியசாலையின் கழிவு நீர்ப் பிரச்சினையால் மக்கள் சிரமம்!

231 0

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கழிவு நீர், வைத்தியசாலைக்கு வெளியே விடப்படுவதனால் இது தங்களது குடிநீர் நிலைகளை மாசுபடுத்துகிறது எனவும், அதனால் துர்நாற்றம் வருகிறது எனவும் வைத்தியசாலை சூழலில் வசிக்கின்ற மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து கழிவு நீரை ஆற்றுக்குள் விடப்பட்டு வருகிறது. இந்த நீரானது ஆறு ஊடாக கிளிநொச்சி குளத்தை வந்தடைகிறது. கிளிநொச்சிக் குளத்திலிருந்தே குடிநீருக்கு நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால், வைத்தியசாலையிருந்து வெளியேறுகின்ற கழிவு நீரில் வைத்தியாசாலையின் இராசயனங்கள் அடங்கியிருக்கலாம். எனவே, அவற்றை சுத்திகரிக்கின்ற வசதிகள் கிளிநொச்சி குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் காணப்படுகிறதா? அங்கிருந்து குழாய் வழியாக விநியோகிக்கப்படும் நீரை தாம் குடிநீராகப் பயன்படுத்தலாமா என்பதனை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவிக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரியுள்ளனர்.

அதேவேளை, வைத்தியசாலையின் அயலில் உள்ள மக்கள் “கடந்த சில மாதங்களாக வைத்தியசாலைக் கழிவு நீரானது தமது குடிநீர் நிலைகளை மாசடையச் செய்கிறது எனவும் அதிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் அயலில் வசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது எனவும் முறையிட்டுள்ளனர்.

எனினும், இதுவரை அதனை நிவர்த்தி செய்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை” என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.