இ-பாஸ் கிடைக்காததால் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பெண்

225 0
இ-பாஸ் கிடைக்காததால் பெண் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் மனைவி ராஜகுமாரி(வயது 48). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு தஞ்சாவூரில் உள்ள ஒரு டயாலிசிஸ் மையத்தில் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.
15 நாட்களுக்கு ஒரு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் உள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இ-பாஸ் பெற்று தஞ்சாவூர் சென்று டயாலிசிஸ் சிகிச்சை பெற்று திரும்பினார். ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டபின் தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் ஒரே மண்டலத்துக்குள் அமைந்த நிலையில் சிகிச்சைக்கு சென்று வருவதில் எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது. மீண்டும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தடை அறிவிக்கப்பட்ட பின் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிகிச்சை பெற இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது.
கடந்த 25-ந் தேதி முதல் சிகிச்சைக்கு செல்ல இ-பாஸ் பெற ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார். ஆனால் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்ட பின்னும் ராஜகுமாரியின் இ-பாஸ் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இதனால் அவர் சிகிச்சைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உடல்நிலை மோசமாகி வரும் நிலையில் அதிகாரிகள் இதற்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.