இரவு நேரத்தில் வெளியில் சுற்றினால் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

220 0

இரவு நேரத்தில் வெளியில் சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.புதுவை வடக்கு சரக பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் சூப்பிரண்டு சுபம் சுந்தர்கோஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதன்பின் போலீஸ் சூப்பிரண்டு சுபம் சுந்தர் கோஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘வடக்கு சரக பகுதியில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் வசித்து வந்த 35-க்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக மாற்றப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கு தற்போது தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். எனவே இரவு 9 மணிக்கு மேல் வெளியில் நடமாடுவதை தவிர்க்கவேண்டும். தேவையின்றி வெளியில் சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.