ஜனாதிபதிக்கு சம்பந்தன் அனுப்பிய கடிதமும் ஞானசார தேரரின் அதிரடியான பதிலும்

260 0

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும் ; என வலியுறுத்தியுள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

கிழக்கு மாகாண தொல்பொருள் பகுதிகளைக் கையாள்வதற்கான ஜனாதிபதி செயலணி ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அமைக்கப்பட்டிருக்கின்றது. முழுக்க முழுக்க சிங்கள இராணுவ அதிகாரிகள், பிக்குகள் போன்றவர்களை உள்ளடக்கிய இந்தக் குழு, திட்டமிட்டமுறையில் கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்தப்போகின்றதா? எனக் கேள்வி எழுப்பியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், அது குறித்து ஜனாதிபதிக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சம்பந்தனின் கடிதம் விரிவானதாகவும், கிழக்கு மாகாணத்தின் நிலை குறித்து ஆதாரபூர்வமாக விபரிப்பதாகவும் அமைந்திருந்தது. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை தர்க்க ரீதியாக சம்பந்தன் விளக்கியிருக்கின்றார். அதற்கு உரிய முறையில் பதிலளிக்காமல், தமிழர் தரப்பினர் வாய்களை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்ற வகையில் அச்சுறுத்தும் பாணியில் ஞானசார தேரரின் பதில் அமைந்திருக்கின்றது

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, பெளத்த மதத்துக்கென ஏற்கனவே இருக்கும் இடங்களுக்கு மேலாக ஓர் அடி நிலத்தைக்கூட கிழக்கில் எடுக்கக்கூடாது என்று இந்தக் கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார்.

பௌத்தத்தை ஊக்குவிக்கின்றோம், பாதுகாக்கின்றோம் பேணுகின்றோம் என்ற போர்வையில் அடையாளம் காணப்பட்ட நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதே கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ செயலணி ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம். இதன் மூலம் கிழக்கு மாகாணத்தையும் முடிந்தளவிற்கு வடமாகாணத்தையும் சிங்கள பகுதிகளாக மாற்றுவதும் இதன் நோக்கம் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதனைவிட மற்றொரு விடயத்தையும் சம்பந்தன் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

கிழக்கு மாகாணம் பல்லின சமூகத்தினர் வாழும் பகுதி. மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் தமிழ் பேசுபவர்கள். அப்படியிருந்தும் செயலணி அதன் கட்டமைப்பில் முற்றுமுழுதாக சிங்களவர்களை கொண்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள சம்பந்தன், ;அந்த செயலணி உருவாக்கப்பட்ட விதம் அது ஒரு சமூகத்தின் நலன்களிற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை புலப்படுத்துகின்றது ஒரு மதத்தின் நலன்களை பாதுகாப்பதற்காக உருவாக்ப்பட்டுள்ளது என்பதையும் புலப்படுத்துகின்றது என்பதை அழுத்திக்கூறியிருக்கின்றார்.

சம்பந்தனின் கடிதம் ஆதாரபூர்வமானதாகவும், தர்க்க ரீதியாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை கிழக்கு மாகாணத்தை சிங்கள – பௌத்த மயப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்பதையும் உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது. ஏற்கனவே இன ரீதியாக பதற்ற நிலையில் உள்ள ஒரு பகுதியில், அரசாங்கத்தின் இந்தத் திட்டம் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதுதான் சம்பந்தனின் கருத்து.

ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட சம்பந்தனின் அறிக்கை, சர்வதேச ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அமெரிக்கா உட்பட பல நாடுகள் அரசாங்கத்தின் இந்த செயலணி குறித்து தமது அதிருப்தியை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தன. இந்தக் கருத்துக்களுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக சம்பந்தனின் கடிதம் அமைந்திருந்தது. தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் இனங்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சிங்கள பௌத்த மயமாக்கலை இலக்காகக்கொண்டதாகவே ஜனாதிபதி செயலணியின் பணி இருக்கப்போகின்றது என்பதை சம்பந்தன் தெளிவாக நிறுவியிருக்கின்றார்.

இந்த நிலையில்தான், ;வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள 9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. அதாவது முழு நாடும் பெளத்த சிங்கள பூமி என உறுதியாகக் கூறியிருக்கும் ஞானசார தேரர், இவ்விடயத்தில் சம்பந்தன் இனிமேல் கேள்வி எழுப்ப முடியாது எனவும் கூறியிருக்கின்றார். சரித்திரத்தையே மாற்றியமைப்பதுதான் ஜனாதிபதி செயலணியின் நோக்கம் என்பதை ஞானசார தேரரின் இந்த அறிக்கையே வெளிப்படுத்தியிருக்கின்றது.