கீழடி அகழாய்வு பணி: கி.பி. 17-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க நாணயம் கண்டெடுப்பு

303 0

கீழடியில் நடைபெற்று வரும் 6-வது கட்ட அகழாய்வு பணியில் அகரம் பகுதியில் கி.பி. 17-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. மணலூர் பகுதியில் அதிகளவில் எலும்புகள் கிடைத்துள்ளன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 5 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றது. தற்போது 6-வது கட்ட அகழாய்வு பணிகள் கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.

இதில் கீழடி பகுதியில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை மொத்தம் 7 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அங்கு பெரிய மற்றும் சிறிய பானைகள் கிடைத்துள்ளது. இதுதவிர செங்கல் கட்டிட பகுதி, விலங்கின எலும்பு கூடு உள்பட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கொந்தகையில் 12-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கிடைத்துள்ளது. இதில் ஒரே குழியில் 8 முதுமக்கள் தாழி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதில் 3 முதுமக்கள் தாழியில் ஆய்வு செய்தபோது அதில் மனித மண்டை ஓடு, மனித உடலின் கையின் பாகங்கள் கிடைத்துள்ளன. இதேபோல் அகரம் பகுதியில் மண் பானை ஓடுகள், சங்கு வளையல்கள், நத்தை ஓடுகள், பாசி, மணிகள் மற்றும் முழுமையான பானைகள் கிடைத்துள்ளன.

மணலூரில் சுடுமண் உலை, மண் திட்டு பகுதி ஆகியவை கிடைத்துள்ளன. இந்நிலையில் நேற்று அகரம் பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது. அந்த நாணம் சுமார் 1 சென்டி மீட்டர் அளவு கொண்டதாகவும், அதன் எடை 300 மில்லி கிராம் இருந்தது. இந்த நாணயம் கி.பி. 17-ம் நூற்றாண்டு காலத்தில் வசித்த மக்களிடையே புழக்கத்தில் இருந்துள்ளதாக தெரிய வருகிறது. நாணயத்தின் ஒரு புறம் நாமம் போன்ற தோற்றம் கொண்டு, நடுவில் சூரியன் மற்றும் அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகிறது. மற்றொரு புறத்தில் 12 புள்ளிகளும், அதன் கீழ் 2 கால் மற்றும் 2 கையுடன் கூடிய உருவம் காணப்படுகிறது.

இந்த நாணயம் வீரராயன் பணம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுஉள்ளது. இதுதவிர நேற்று மணலூரில் உள்ள ஒரு குழியில் சிறிய எலும்பு மற்றும் பழங்கால கற்களும் கிடைத்துள்ளன. மற்றொரு குழியில் பெரிய எலும்பு ஒன்றும் கிடைத்துள்ளது. இவை மனித எலும்புகளா அல்லது விலங்கின எலும்புகளா என்று ஆய்வு செய்தால் மட்டுமே முழு விவரமும் தெரிய வரும் என மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெறும் அகழாய்வில் அடுத்தடுத்து ஏராளமான பொருட்கள் கிடைத்து வருவதால் தொல்லியல் அலுவலர்கள் மிக ஆர்வத்துடன் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.