ஒட்டுமொத்த தமிழ்த் தேச ஆன்மாவை எரித்துள்ள யாழ்ப்பாணம் பொதுநூலக எரிப்பு சம்பவம்: சட்டத்தரணி சுகாஸ்

444 0

யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் மூலம் தமிழர்களை இன அழிப்பு  செய்வது என்பது சிங்கள-  பெளத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் என்பது புலப்படுகின்றது. ஒரு இனத்தின் அடையாளங்களான கல்வி, மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகிய நான்கு கூறுகளையும் அழிப்பதன் மூலம் ஒரு இனத்தை இலகுவாக அழிக்கலாம் எனும் கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டது. இது ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தின் ஆன்மாவை எரித்ததொரு நிகழ்வாகவே பார்க்கின்றோம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான க. சுகாஸ் கடும் வேதனை வெளியிட்டுள்ளார்.

யாழ். பொதுநூலக எரிப்பின் 39 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து பொதுநூலகத்தின் முன்பாக   திங்கட்கிழமை(01) பிற்பகல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.


மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவேந்தலை நாம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் தமிழ்த்தேசம் மீதான சிங்கள தேசத்தின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் நீட்சியின் ஒரு தொடக்கப் புள்ளியாகவே யாழ்ப்பாணம் பொதுநூலக எரிப்பை நாங்கள் பார்க்கின்றோம்.

குறித்த காலப் பகுதியில் தமிழர்கள் ஆயுதமேந்தியுமிருக்கவில்லை. போராடியிருக்கவுமில்லை. அகிம்சை வழியில் போராட்டங்கள் உச்சத்தைத் தொட்டிருந்த காலம் அது. அந்த வேளையில் தான் திட்டமிட்ட முறையில் தமிழர்களின் அறிவுப் பொக்கிஷம் மீது சிங்கள- பெளத்த பேரினவாதம் தாக்குதலைத் தொடுத்துள்ளது.

இவற்றினொரு தொடர்ச்சியாகவே முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை அரங்கேறியிருந்தது. அந்த முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை உயிர்களைப் பலியெடுப்பதாக அமைந்தது. ஆனால், யாழ்ப்பாணம் பொதுநூலகத்தை  எரித்தமை தமிழர்களின் ஆன்மாவை அழித்ததாக கருதப்பட வேண்டியதொரு விடயம். இவையெல்லாவற்றிற்கும் சேர்த்துத் தான் சர்வதேச விசாரணையை நாங்கள் கோரி நிற்கின்றோம்.

ஈழத்தில் அரங்கேறியது இனப்படுகொலை தான் என்பதை நிரூபிப்பதற்கான முக்கிய ஆதாரமாக யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் காணப்படுகிறது.  ஆகவே, இனப்படுகொலைக்கான ஆதாரமில்லை எனச் சொல்பவர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வையும் தங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

எனவே, ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நீதி காண்பதற்கான போராட்டத்தைத் தொடருமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.