சிறிலங்காவில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை உயிரிழந்தது

246 0

சிறிலங்கா  நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஸபான தோட்டத்தில் வாழமலை பகுதியில் கடந்த 26 ஆம் திகதி காலை கம்பி வலையில் சிக்கிய நிலையில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

காட்டுப்பன்றிகளிடமிருந்து மரக்கறி உற்பத்தியை பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையில் 7 வயதுடைய 6 அடி நீளமுடைய ஆண் கருஞ்சிறுத்தை கடந்த 26 ஆம் திகதி அதிகாலை சிக்கியது.

இது தொடர்பில் தோட்ட மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர். அதன்பின்னர் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் கருஞ்சிறுத்தையை கடும் சிரமத்துக்கு மத்தியில் மயக்க ஊசி செலுத்தி மீட்டனர்.

சம்பவ இடத்தில் வைத்தே அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் பாதுகாப்பான முறையில் ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

கருஞ்சிறுத்தை பூரணமாக குணடைந்த பின்னர் வனத்தில் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி கரும்புலி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட கருஞ்சிறுத்தை இனம் கடந்த ஜுன் 20 ஆம் திகதி மஸ்கெலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இனத்தை சேர்ந்த அரியவகையான சிறுத்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.