காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதற்கான தகவல்களை வழங்ககூடிய எவருடனும் பேச தயார்!- சாலிய பீரிஸ்

52 0

காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்புகளுடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் காணாமல்போனவர்களின் அலுவலகம் தன்னுடைய ஆணைக்கு உதவக்கூடிய குறிப்பாக காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய தகவல்களை வழங்க கூடிய எவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐலன்டிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் முன்னெடுத்த விசாரணைகள் என்ன நிலையிலுள்ளன?

பதில் ; தனிப்பட்ட விசாரணைகள் தொடர்கின்றன அவை பல்வேறு கட்டத்தில் உள்ளன. தனிப்பட்ட விசாரணைகள் குறித்து எங்களால் பதிலளிக்க முடியாது. இரகசியத்தன்மையை பேணுவதற்கான ஏற்பாடுகளே இதற்கு காரணம்.

ஒவ்வொரு சம்பவத்தினதும் தகவல்களை அடிப்படையாக வைத்து காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் வெவ்வேறு தருணங்களில் விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும்.

சில சம்பவங்களில் தங்களின் பாசத்திற்குரிய ஒருவர் காணாமல் போனமை குறித்து குடும்ப உறுப்பினர் ஒருவர் முறைப்பாட்டை சமர்ப்பித்தால் விசாரணைகள் ஆரம்பமாகும்.

இதேவேளை தனக்கு வழங்கப்பட்ட ஆணைகளின் அடிப்படையில்  இனந்தெரியாத   மனித எச்சங்கள் மீட்கப்பட்ட வேளைகளில் அவை காணாமல் போனவர்களினதாகயிருக்கலாம் என்ற அடிப்படையில் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் தலையிட்டுள்ளது.
காணாமல்போனவர்கள் குறித்த அலுவலக சட்டத்தின் கீழ் மனித எச்சங்கள் தொடர்பாக தலையீடு செய்வதற்கும் நீதிமன்ற விசாரணைகளை பார்வையிடுவதற்கும் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கு அதிகாரம் உள்ளது.
மன்னார் மனித புதைகுழி போன்ற வழக்குகளில் நாங்கள் அவ்வாறு தலையிடலாம் நீதிமன்ற விசாரணைகளை பார்வையிடலாம்.

பொருள்சாட்சிகளிடம் காணாமல்போனவர்களின் அலுவலகம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.
வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானவையல்ல என கண்டறியப்பட்ட சம்பவங்கள் குறித்து மேலதிக தகவல்களை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

விசாரணைகளை மேற்கொண்டு முன்நகர்த்தும்போது தனிப்பட்ட நபர்கள் குறித்து நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருக்கும். மேலும் இந்த விசாரணைகளிற்கு ஆதரவளிக்ககூடிய அமைப்பு முறை மற்றும் செயற்பாடுகளை உருவாக்கவேண்டியிருக்கும்.

எந்த பணியாளரோ அல்லது உட்கட்டமைப்பு வசதியோ இல்லாமல் நாங்கள் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கவேண்டிய நிலையிலிருந்தோம்.

கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் இந்த அலுவலகத்தை கட்டியெழுப்பியுள்ளோம்.

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் கையாளப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தரமுடியுமா?

பதில்; காணாமல்போனவர்களின் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் இன்று வரை 15000 கோப்புகள் எங்களிடம் உள்ளன. நாங்கள் இதனை ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் பின்னர் என பிரிக்கவில்லை. இந்த ஆவணங்களை நாங்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றோம்.

 

கேள்வி – ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட அலுவலகத்தின் உறுப்பினர்களில் பின்னர் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா?

பதில்: இல்லை எந்தமாற்றமும் நிகழவில்லை.

கேள்வி ; உலக நாடுகள் சர்வதேச செஞ்சிலுவை குழு போன்ற சர்வதேச அமைப்புகள் போன்றவற்றிடமிருந்து உங்கள் அலுவலகத்திற்கு ஏதாவது உதவி கிடைத்ததா?

பதில்; ஐநா சர்வதேச செஞ்சிலுவை குழு போன்றவற்றிடமிருந்து கணிணிகள் தளபாடங்கள் போன்ற உதவிகளும், காணாமல்போனவர்கள் குறித்த விவகாரங்களின் நிபுணர்களின் உதவிகளும் கிடைத்தன.

கேள்வி – புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டீர்களா? உலக தமிழர் பேரவை உட்பட..

பதில் ; இல்லை ஆனால் காணாமல்போனவர்களின் அலுவலகம் தன்னுடைய ஆணைக்கு உதவக்கூடிய குறிப்பாக காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய தகவல்களை வழங்க கூடிய எவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயார்.