சிறீலங்காவில் ஊடகங்களை முடக்கும் முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுவருகிறது

269 0

fefralசிறீலங்காவில் ஊடகங்களை முடக்கும் முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொது அமைப்புக்களின் பிரதிநிதியும் ஃகபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை ஒழித்துக்கட்டி நாட்டின் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டும் நோக்கிலே ஆட்சிக்குவந்த தற்போதைய அரசாங்கத்தில் இருக்கும் சில அமைச்சர்கள், ஊழல் மோடிச்காரர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக தமது சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி ஊடகங்களை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

அரபு நாடுகளில் ஏற்பட்ட புரட்சியின் போது, சர்வாதிகாரிகளையும், ஊழல் மோசடிக் காரர்களையும் ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்தது போல், எமது நாட்டு மக்களும் ஊழல் மோசடிகளிலும், படுகொலைகளிலும் ஈடுபட்டவர்களை ஆட்சியிலிருந்து விரட்டியடித்தனர் என்று குறிப்பிடும் கீர்த்தி தென்னகோன், இதனாலேயே 2015 ஜனவரி எட்டாம் திகதி புதிய ஆட்சி உருவானதாகவும் தெரிவித்தார்.

இதற்கமைய கடந்த இரண்டு ஆண்டுகாலமாக ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வார்கள் என்று காத்திருந்த போதும், இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டின் சொத்துக்களையும், நிதியையும் சூறையாடிய தரப்பினருக்கு எதிராக எதனையும் செய்யவில்லை என்றும் விசனம் வெளியிட்டார்.

எனினும் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்ட கொரிய பிரதமர் பதவியிலிருந்து துரத்தப்பட்டார், பிரேசில் ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டார், ரஸ்யாவின் தற்போதைய பொருளதார மாற்றத்திற்கான முன்னோடியாகக் கருதப்படும் பொருளாதார அமைச்சர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த தென்னகோன்,

ஆனால் ஸ்ரீலங்காவில் மாத்திரம் இன்னமும் பழைய திருடர்களையும், புதிய திருடர்களையும் கைதுசெய்யுங்கள் என்று போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற மனிதப் படுகொலைகள், பிரகீத் மற்றும் லலித் குகன் ஆகியோரின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட முடியாது போயுள்ளதாகவும் தென்னகோன் கவலை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா துறைமுக அதிகார சபை, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, மிக் கொடுக்கல் வாங்கல் உட்பட ஊழல் மோசடிப் பட்டியல் நீண்டு கொண்டு சென்றாலும், அந்த ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள், தற்போதைய ஆட்சியில் உள்ளவர்களுடன் இரகசிய ஒப்பந்தங்களை செய்துகொள்வதாகவும் தென்னகோன் தெரிவித்தார்.

மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய கொள்ளையர்களை கைதுசெய்வதற்குப் பதிலாக இன்று நாடாளுமன்றில் அவன்ட் கார்ட் மூலம் நாட்டின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் கும்பலை பாதுகாக்க இரகசிய உடன்படிக்கைகள் எட்டப்படுவதுடன், இவற்றை எதிர்ப்பவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தும் வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஊழல் மோசடிகள் இடம்பெற்ற விதம், அவற்றுடன் தொடர்புடையவர்கள் குறித்த விபரங்களை வெளியிடும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள் பகிரங்கமாக அச்சுறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தற்போதைய அரசாங்கத்தின் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கை தவிடுபொடியாகும் நிலைக்கு மாறி வருகின்றது என்றும் தெரிவித்த அவர், ஊழல் மோசடிக் காரர்களை கைதுசெய்வதை தற்போதைய அரசாங்கம் கைவிட்டுவிட்டு, நாட்டின் முற்போக்கு சக்திகள் எதிர்பார்க்கும் மறுசீரமைப்புக்களை ஒருபோதும் செய்ய முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் புதிய அரசியல் யாப்பு, தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் இனிமேல் நம்பிக்கை கொள்ளவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நீதி தாமதமாவது என்பதும் நீதி மறுக்கப்படுவதற்கு சமமானது என்று தெரிவித்துள்ள அவர், நீதியை நிலைநாட்டும் பயணத்தில் தற்போதைய அரசாங்கம் ஆமை வேகத்திலேயே சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறி இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவதை, ஊழல் மோசடிக் காரர்களுடன் இரகசிய உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்ட நிலையிலேயே கொண்டாட தயாராகி வருவதாகவும் தென்னகோன் குற்றம்சாட்டினார்.

இதனால் நாட்டு மக்கள் ஊழல் மோசடிக் காரர்களை பாதுகாக்கும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை விரும்பவில்லை என்பதை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, இனிமேலாவது துரிதமாக செயற்பட வேண்டும் என்பதையே வலியுறுத்தி நிற்பதாகவும் கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளார்.