அகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒரு சீட்டுக்கூட இல்லை: ஸ்டாலின் எதிர்ப்பு

342 0

பல் மருத்துவம் மற்றும் மருத்துவப்படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான நீட் இடஒதுக்கீட்டில்- பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது. கடந்த 4ஆண்டுகளில் 11,000 இடங்களை அவர்கள் இழந்துள்ளதை எதிர்ப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மருத்துவக்கல்விக் கோட்டாவில் கடந்த 4 ஆண்டுகளாக நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்ட மருத்துவப்படிப்புக்கான அனுமதியில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச்சேர்ந்த ஒரு மாணவருக்குக்கூட இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்கிற அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் அகில இந்திய மருத்துவ கோட்டாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம், பல் மருத்துவ பட்டப்படிப்பில் கடந்த 4 ஆண்டுகளாக மொத்தம் 40 ஆயிரத்து 842 சீட்டுகளில், பொதுப்பிரிவுக்கு 31 ஆயிரத்து 780 சீட்டுகளும், பட்டியலினத்தவருக்கு 9 ஆயிரத்து 162 சீட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை என புகார் அளித்துள்ளது. அவர்களுக்கான 11 ஆயிரம் இடங்களை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளது.

அதுகுறித்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் மத்திய சுகாதாரத்துறைக்கு 15 நாளில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முக நூலில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவரது முக நூல் பதிவு:
“இந்தச் சமூக அநீதியைக் கண்டிக்கிறேன்!

பல் மருத்துவம் மற்றும் மருத்துவப்படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான நீட் இடஒதுக்கீட்டில்- பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 11,000 இடங்களை அவர்கள் இழந்துள்ளனர்.

அரசியல்சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை பாதுகாத்திட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.