மக்களின் சமூக விலகலுக்கு உதவி செய்யும் டெலிவரி ரோபோக்கள்

264 0

அமெரிக்காவின் பிரிஸ்கோ நகரில் பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிப்பதற்கு உதவி செய்யும் டெலிவரி ரோபோக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மனித குலத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், வைரஸ் மேலும் பரவலாமல் இருக்க சமூக விலகல்தான் தற்போதைக்கு ஒரே தீர்வாக கருதப்படுகிறது.

இதற்காக ஊரடங்கு விதிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவல் குறையத் தொடங்கியதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. எனினும் வைரசின் தாக்கம் எத்தனை நாட்கள் இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எனவே, சமூக விலகலை கடைப்பிடிப்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்பம் சார்ந்த வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. குறிப்பாக ரோபோக்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

அவ்வகையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் பிரிஸ்கோ நகரில், பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிப்பதற்கு ரோபோக்கள் உதவி செய்கின்றன. நோய் பரவலை கட்டுப்படுத்தவும், மக்கள் வெளியில் சென்று பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோக்களை ஒரு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை ஆர்டர் செய்தால், இந்த ரோபோக்கள் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் வீடுகளுக்கே பொருட்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. இந்த டெலிவரி ரோபோக்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிறுவனம் முதலில் கடந்த பல மாதங்களாக யுடி டல்லாஸ் வளாகத்தில் உணவு விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது அந்த வளாகம் தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டதால், தங்கள் திட்டத்தை பிரிஸ்கோவிற்கு விரிவுபடுத்தி உள்ளனர்.

பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிப்பதற்கு இந்த ரோபோக்கள் உதவுவதுடன், கொரோனா காலம் முடிந்த பிறகும் வர்த்தக திட்டங்களுக்கு இந்த ரோபோக்கள் உதவும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.