பசில் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

261 0

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணை செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2.991 பில்லியன் ரூபாய் நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் சிலர் இன்று உயர் நீதிமன்ற வழக்கில் ஆஜராகியுள்ளமையால், இன்றைய வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நிதியை பயன்படுத்தி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கூரைத்தகடுகள் விநியோகித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க மற்றும் அதன் முன்னாள் பிரதி பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி ஆகியோர் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.