இரட்டை நகர ஒப்பந்தமும், இரு மாணவர்கள் படுகொலையும் – லண்டனில் இருந்து ஒரு பார்வை : 02

42 0

1-32-640x381அந்த அறிக்கையில் பொதுப்பட சிறீலங்கா காவல்துறை தென்பகுதியில் செய்த தவறுதலான கொலைகளுடன் கலந்து எழுதப்யபட்டிருந்ததானது, வடக்கு, கிழக்கில் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட- முதலீட்டுக்கெதிரான சூழலைஉருவாக்கும் தந்திரத்தை மறைக்க வழிவகுத்துள்ளது.லண்டனில் இருந்து லோகன் பரமசாமி.

தேசிய பாதுகாப்பு என்பது சிறீலங்கா அரசைப் பொறுத்தவரையில் அது புலம்பெயர் தமிழ் சமுதாயத்தால் ஏற்படக்கூடிய இடையூறுகள் தான்.  புலம்பெயர் சமுதாயத்தின்  ஒற்றுமையும் ஒழுங்கமைப்பும் எப்பொழுதெல்லாம் நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலையை அடைகிறதோ அப்பொழுது தனது தேசிய பாதுகாப்பின்  பெயரால் சிறீலங்கா அரசு அந்த நிறுவனத்தை உடைத்து தனிஅலகுகளாக ஆக்க எடுக்க கூடிய நடவடிக்கைகளே தேசிய பாதுகாப்பிற்கான திட்டங்களாகும்.

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் புலம் பெயர் தமிழ் சமுதாயத்தை ஒருஒழுங்கமைப்பு நிலைக்கு கொண்டு வந்து அதன் மூலம் பொருளாதார முயற்சிக்கான தொடர்புகளை ஏற்படுத்த முனைந்தார். இதற்கு ஒரு பாடம் புகட்டும் நடவடிக்கையாகவே முதலீட்டுக்கு ஒவ்வாத நிலையை வடக்கு-கிழக்கில் ஏற்படுத்தும் பொருட்டு இரு மாணவர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டது என்று கூறக்கூடிய வகையில் நிகழ்வுகள் நடந்தேறியதைப் பார்த்தோம்.

வடக்கு, கிழக்கு பகுதி யுத்தகாலத்தின் பின் மிகவிரைவாக மாற்றம் கண்டு வருகிறது. தமது சொந்த நிலத்தை முன்னேற்ற வேண்டும் என்ற ஆர்வம் பொதுவாக எல்லாத் தமிழ் அமைப்புகளிடமும் தனிப்பட்டவர்களிடமும் ஏற்பட்டு, தாம் சார்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர வேண்டும் அவர்களை சொந்தக்காலில் நிற்கச் செய்ய வேண்டும், பாடசாலைகளுக்குரிய உபகரணங்கள் பெற்றுத்தர வேண்டும் என்ற ஆதங்கம்  ஒவ்வொரு புலம் பெயர் உறவுகளுக்கும் ஏற்பட்டு உதவிகளும் செய்து வருகின்றனர்.

இது ஒரு பொதுமனநிலையாக எழும் பொழுது கூட்டுச் சேர்ந்து திட்டங்களை சற்று பெரிதாக சிந்திப்பது அதன் வளர்ச்சிப் படிமுறை தான். இந்தவகை வளர்ச்சி தேசியம் சார்ந்தஅமைப்பு முறை வளர்ச்சியாக உருப்பெறுகிறது.

killing-students

தமது உறவினர்களுக்கு சொந்தமாக தொழில் செய்ய உதவுவதற்கும் சிறீலங்காவின் இறையாண்மைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தமிழர்கள் மனதில் கொண்டுள்ளார்கள். ஆனால் நிறுவனமயமாவது நிரந்தர வாழ்வாதாரத் திட்டங்களை ஏற்படுத்திக் கொள்வது என்பன சிறீலங்கா அரசின் சொந்த நிகழ்ச் சிநிரலுக்கு இசைவானதாக பார்க்கப்படவில்லை. அரசிடம் கையேந்தி நிற்கும் ஒரு தமிழ் சமூகத்தையே அது எதிர்பார்க்கிறது.

ஏற்கனவே கடந்த யுத்தகாலங்களில் தன்னிறைவுடன் அரசை கைவிட்டு சுயமாக தாம் வாழலாம் என்ற நம்பிக்கை மனப்பாங்கு தமிழ் மக்களிடம் உண்டு என்றே சிறீலங்கா அரசாங்கம் இன்னும் எண்ணுகிறது.

மிகஅண்மைய கடந்த காலத்தில் ஓரு கட்டமைப்பான நிறுவனம் தம்மத்தியில் இருக்கும்போது , புலம்பெயர் தமிழ் சமூகம் விமானம் வாங்கி தம் மீது குண்டுவீச்சு நடத்தியது என்பதையும் அரசு மறக்கவில்லை. ஆக தமிழரின் பொருளாதார பலம் மிக அபாயமானது என்ற மனப்பயத்தின் காரணமாகவே புலம்பெயர் அமைப்புகளின் நடவடிக்கைகளை சிறீலங்கா தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டதாக பார்க்கிறது.

இதற்கு இன்னும் ஒருகாரணம், சிங்களக் குடியேற்றம் என்ற பெயரில் தமிழ் பிரதேசங்களில் இருக்கும் அரசாங்க காணிகளை சிங்கள சமூகத்திற்கு அரச உறுதிப் பத்திரம் வழங்கி குடியேற்றி வருகிறது.

தமிழ் சமுதாயம் பொருளாதாரத்தில் நிலைஎடுத்து கொண்டு விட்டால் அரசால் வழங்கப்பட்ட காணிகளை தமிழர்களே சிங்களவர்களிடம் பணம் கொடுத்து வாங்கிவிடக் கூடியநிலை உள்ளது. அதேபோல அரச பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஊட்டம் இல்லாது வடக்கு, கிழக்கில் சிங்கள மக்கள் வாழமாட்டார்கள்  என்ற நிலையும் முக்கியமானது.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள், அவர்களுக்கு ஊட்டம் கொடுக்கக் கூடிய மேலைத்தேய நாடுகளில் வாழும் அவர்களது உறவினர்களிடம் பெற்றுகொள்ளும் உதவித்தொகையில் முற்றுமுழுதாக நுகர்ச்சி செலவீட்டில் தமது வாழ்கையைச் செலுத்தும் பகுதியினர், சிறீலங்காவுக்கு சாதகமான போக்கைக் கொண்டவர்களாகிறார்கள்.  அதே ஊட்டத்தொகை உற்பத்தித் தரத்திற்கு உயர்த்தப்படுமாயின் அது பாதகநிலையாகப் பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் அவர்கள் லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒழுங்கமைப்புகள் செய்யும் வேளையில் யாழ்ப்பாணத்தில் இரு மாணவர் படுகொலை செய்யப்பட்ட தன்மையானது யாழ்ப்பாணத்தை நிதி முதலீடு செய்வதற்குரிய இடம் இல்லை என்று புலம்பெயர் தமிழர்களை எச்சரிப்பது போன்று உள்ளது.

அதேவேளை வடமாகாணசபை சர்வதேச அலகுகளை இணைத்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும்  வகையில் வரம்புமீறிச் செயற்பட எண்ணினால், அதிகாரம் யார் கையில் என்பதையும் கற்றுக்கொடுப்பது போன்றும் உள்ளது.

இந்தக் கொலைகளிலே சம்பந்தப்பட்டவர்களை சம்பந்தப்பட்ட இடத்திற்கு கூட்டி வந்து அளவெடுப்பதும்- விலங்குகள் போட்டு வாகனங்களிலே கொண்டு செல்வதும்- புலனாய்வுத்துறைப் பிரிவுகளை கலைத்து விடுவதும்- பாராளுமன்றத்திலே வாள்வெட்டுக்குழுக்கள் பற்றிய விவாதங்களை உருவாக்குவதும் – வெறும் நாடகங்களே அன்றி எந்தவித ஆக்கபூர்வமான சிந்தனை சார்ந்ததாகவும் இல்லை என்றே தெரிகிறது.

சர்வதேச பார்வை குறித்து நோக்குவோமேயானால் உலகில் எந்த நாடும் இதனை ஒரு கட்டமைப்பு சார்ந்த இனஅழிப்பாக பார்க்கவில்லை. பொதுவாகச் சொல்வதானால் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்றே கூறலாம்.

ஜெனீவாவில்  சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் குழுக் கூட்டத்தில் சிறீலங்கா குறித்த விவகாரங்கள்  மீளாய்வு செய்யப்பட்ட போது,  இந்த சம்பவம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்று காட்டுவதற்கே, பாராளுமன்ற விவாதங்களும் நீதிமன்றஅறிக்கைகளும் அரச திணைக்கள கலைப்புகளும் அமைந்திருந்தன.

அடுத்து சர்வதேச அளவில் பார்ப்பதானால், அரசசார்பற்ற நிறுவனங்கள் கூட இதனை சிறீலங்காவில் வழமையாக இடம் பெறும் காவல்துறையினரின் கொலையாக- தெற்கில் இடம்பெற்ற இதேபோலான கொலைகளுடன் ஒத்துப்பார்க்கும் தன்மையே உள்ளது.

Sri Lankan Police Shooting of Two Students More of the Same என்ற தலையங்கம் தீட்டி மனித உரிமை காப்பகம் விட்ட அறிக்கையில் ஆசிய நாடுகளுக்கான இயக்குனர் Brad Adams அவர்கள் சிறீலங்கா உண்மையிலேயே காவல்துறையை மீளமைக்க வேண்டுமாயின் புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதிலும் பார்க்க காவல்துறையினரின்  துஷ்பிரயோகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் அந்த அறிக்கை பொதுப்பட சிறீலங்கா காவல்துறை தென்பகுதியில் செய்த தவறுதலான கொலைகளுடன் கலந்து எழுதியதானது, வடக்கு, கிழக்கில் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட- முதலீட்டுக்கெதிரான சூழலைஉருவாக்கும் தந்திரத்தை மறைக்க வழிவகுத்துள்ளது.

ஆக தமிழ் மக்கள் மீது இடம் பெறும் எந்தவித திட்டமிட்ட தாக்குதல்களையும் இனஅழிப்பு நோக்கத்திலான அரச செயற்பாடு என்ற பார்வை இதுவரை எவராலும் பார்க்கப்படவில்லை.

ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில்  மேலைநாட்டுபேராசிரியர் ஒருவர் முன்பு விடுதலைப்புலிகள்,  சிறீலங்கா அரசுக்கு எதிராக தமிழ் பகுதிகளில் அரசு கட்டமைக்கும் நடவடிக்கைகளில் இருந்தபோது எழுதிய ஒரு கட்டுரை நினைவுக்கு வருகிறது.

“வடக்கில் விடுதலைப்புலிகள் பெருமெடுப்பிலாக கீழ் நடுத்தர வர்க்க உழைக்கும் வறிய மக்களை தம்பக்கம் ஈர்த்துள்ளார்கள். கிழக்கிலும் வன்னியிலும் விவசாயிகளையும் மீன்பிடி சமுதாயத்தையுமே கொண்டதாக அவர்களுடைய போராளிகள் உள்ளார்கள் . மேலும்,  மேல் மத்திய மற்றும் மத்திய வர்க்கத்தில் பெரும்பாலானவர்கள் புலம் பெயர்ந்து மேலைநாடுகளுக்கு சென்று விட்டார்கள்” என்று அவர் எழுதியிருந்தார்.

ஆனால் இன்று அதேபுலம் பெயர்ந்த மக்கள் மேல் மத்திய வர்க்கத்தினரும் மத்திய வர்கத்தினரும் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தீட்டி, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை தூக்கி நிமிர்த்திவிட முனையும் வேளையில், மீண்டும் அதே அரசிற்கு எதிராகத்தான் அவர்களும் போராட வேண்டி உள்ளது.

இதில் ஒன்று மட்டும் முக்கியமானது. வர்க்கங்கள், மதங்கள்,  பிரதேசங்கள் என்பவற்றைக் கடந்து பௌத்த சிங்களம் அல்லாத எவரும் சிறீலங்காவில் கட்டுமானங்கள் கொண்டிருக்க முடியாது  என்பதே அது.