தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு

304 0

201611190558144194_aravakurichi-thanjavur-thirupparankundram-including-4_secvpfதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

தமிழகத்தில் தஞ்சை, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி, தி.மு.க. வேட்பாளர் அஞ்சுகம் பூபதி, பா.ஜனதா வேட்பாளர் எம்.எஸ்.ராமலிங்கம், தே.மு.தி.க. வேட்பாளர் அப்துல்லா சேட், பா.ம.க. வேட்பாளர் குஞ்சிதபாதம் உள்பட 14 பேரும், அரவக் குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜி, தி.மு.க. சார்பில் கே.சி.பழனிசாமி, தே.மு.தி.க. சார்பில் எம்.முத்து, பா.ஜ.க. சார்பில் எஸ்.பிரபு, பா.ம.க. சார்பில் பாஸ்கரன் உள்பட 39 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ், தி.மு.க. வேட்பாளர் சரவணன், தே.மு.தி.க. வேட்பாளர் தனபாண்டியன், பா.ஜனதா வேட்பாளர் சீனிவாசன் உள்பட 28 பேரும் போட்டியிடுகிறார்கள்.

3 தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக் கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அ.தி.மு.க. சார்பில் ஓம்சக்தி சேகரும் மற்றும் 6 பேரும் போட்டியிடுகிறார்கள். இந்த 4 தொகுதிகளிலும் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

அ.தி.மு.க. வேட்பாளர் களை ஆதரித்து அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்தனர். தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டனர். தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பிரசாரம் செய்தனர். மேலும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டனர்.

4 தொகுதிகளிலும் இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

தஞ்சை தொகுதியில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 516 வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 276 வாக்குச்சாவடிகளும், அரவக்குறிச்சியில் 2 லட்சத்து 347 வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்காக 245 வாக்குச்சாவடிகளும், திருப்பரங்குன்றத்தில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 980 வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்காக 291 வாக்குச்சாவடிகளும் அமைக் கப்பட்டு உள்ளன.
வாக்குப்பதிவை யொட்டி இந்த தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் போலீசாருடன் துணை ராணுவப்படையினர் மற்றும் பறக்கும் படையினரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு வீடியோ பதிவு செய்யப்படுகிறது. அனைத்து வாக்குசாவடிகளுக்கு நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிடும் நெல்லித்தோப்பு தொகுதியில் 31 ஆயிரத்து 366 வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்காக 26 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஓட்டு எண்ணிக்கை வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அன்று பகல் 12 மணிக்குள் முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.