பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு 331 கனஅடி தண்ணீர் திறப்பு

20 0

கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்ததை அடுத்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 331 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் உள்ளன.

பூண்டி ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு கால்வாய் மூலம் அனுப்பப்படுவது வழக்கம்.

பூண்டி ஏரியில் தற்போதைய நிலவரப்படி 587 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தேவையை அதிகரித்ததை அடுத்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 331 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 1,837 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர் வரத்து 242 கனஅடியாக இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 79 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. புழல் ஏரியில் 2,926 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. நீர்வரத்து 10 கனஅடியாகவும், சென்னை குடிநீர் தேவைக்காக 125 கனஅடியும் தண்ணீர்அனுப்பப்படுகிறது.

சோழவரம் ஏரி கிட்டத்தட்ட வறண்ட நிலையில் காணப்படுகிறது. இங்கு வெறும் 72 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. தண்ணீர் வரத்தும், வெளியேற்றமும் இல்லை.

குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் மொத்தம் 11,257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதய நிலவரப்படி 5,422 மில்லியன் கனஅடி (5.4 டி.எம்.சி.) தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த இதே நாளில் வெறும் 144 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏரிகளில் தற்போது இருக்கும் தண்ணீரை கொண்டு 6 மாதத்துக்கு தேவையான குடிநீர் தேவையை நிறைவேற்ற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.