நேபாளத்தில் ஜூன் 2-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

285 0

நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், இன்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை அந்நாட்டு அரசு நீட்டித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அங்கு இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 9 பேருமே 21 வயது முதல் 38 வயது வரை உள்ளவர்கள் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் இருந்து கடந்த 12-ந்தேதி அங்கு சென்ற 25 வயது வாலிபருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது அங்கு ஏற்பட்ட 2-வது உயிரிழப்பாகும். இந்த நிலையில் தற்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், இன்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை அந்நாட்டு அரசு நீட்டித்துள்ளது.