டாஸ்மாக் கடைகளுக்கு கூட்டம் சேர்ப்பதில் அரசுக்கு உள்ள அக்கறை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்பதில் இல்லை: கனிமொழி

17 0

டாஸ்மாக் கடைக்கு இன்னும் அதிகமான மக்களை வரவழைக்க வேண்டும் என்பதில் உள்ள அக்கறை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை இங்கு அழைத்து வருவதில் தமிழக அரசுக்கு இல்லை என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டி விஸ்வநாததாஸ் நகர், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம், வில்லிசேரி ஆகிய இடங்களில் நகர, ஒன்றிய திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். திமுக பிரமுகர் ராமானுஜ கணேசன் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு, முடித்திருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றியச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிள்ளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறும்போது, டாஸ்மாக் கடைகளை எப்படி நடத்துவது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, இன்னும் அதிகமான மக்களை டாஸ்மாக் கடைக்கு வரவழைக்க வேண்டும் என்பதில் உள்ள அக்கறை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை இங்கு அழைத்து வருவதில் இல்லை. அவர்கள் பல மாதங்களாக வேலையின்றி தவித்து வருகின்றனர். மாணவர்கள் தங்குவதற்கு இடமில்லை. கல்லூரி நடைபெறவில்லை. தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

காசில்லாமல் சாப்பிடுவதற்கு வழி இன்றி தவித்து வருகின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு தான் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டுக்கு ஓரிரு விமானங்கள் தான் வந்துள்ளன. பல வெளிநாடுகளில் இருந்து தமிழர்கள் திரும்பி வருவதற்கு வழியே கிடையாது. அப்படி வரக்கூடியவர்களும் மற்ற மாநிலங்களுக்கு வந்து, அங்கிருந்துதான் தமிழகத்துக்கு வர வேண்டிய சூழல் உள்ளது.

இதில், கர்ப்பிணிப் பெண்கள் கூட பெரிய அளவிலான துன்பங்களைத் தாண்டி, கஷ்டப்பட்டு சுமார் 18 மணி நேரம் வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்த அளவுக்கு பல நாடுகளில் தமிழர்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டு வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்த தமிழர்கள் இங்கே அழைத்து வரும் சூழலை தமிழக அரசு உருவாக்க மறுக்கிறது.

இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்வோருக்கு அங்கு மருத்துவ பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி, உடல் நலத்துடன் இருந்தால் அனுமதிக்கின்றனர். அதைப் போல் தமிழக அரசும் செய்யலாம்.

ஆனால் அதையெல்லாம் செய்யாமல், டாஸ்மாக்கால் இன்னும் கரோனா பாதிப்பு அதிகமாகும் வாய்ப்பு இருந்தாலும், அது நடக்கிறது அக்கறை இருக்கே தவிர, வேறு எந்த விதத்திலும் மக்களை பாதுகாப்பதற்கான அக்கறையை அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை.

மத்திய அரசு இந்த கரோனா பாதிப்பையும் ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு மாநில அரசு உரிமைகளில் தொடர்ந்து தலையிட்டு வருகிறது. இது மிகவும் தவறான ஒன்று. இதனை எல்லா மாநில அரசுகளும் கண்டிக்க வேண்டும்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும், என்றார் அவர்.