சாலவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு-நிவாரணத்திற்கென 875 மில்லியன் ரூபா நிதி செலவு

364 0

salawa-blast_armycampசாலவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 875 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

சாலவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மதிப்பீட்டு திணைக்களத்தின் மதிப்பீடு படி 1279 மில்லியன் ரூபா நிதி நிவாரணம் வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்துக்கள் சேதமடைந்ததால் இடம்பெயர்ந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா படி ஒக்டோபர் மாதம் வரை கொடுப்பனவு வழங்கல், வீடுகள் புனர்நிர்மானத்திற்காக நிதி வழங்கல் போன்றவற்றிற்காக 860 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இதுதவிர, சுய தொழில் செய்வோருக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கல் போன்றவற்றிற்காக மேலும் 15 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வெடிப்புச் சம்பவம் காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பாதிப்புக்களை சந்தித்த மக்கள் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.