காத்திரு காலமே. – கயல் லதா-

424 0

காத்திரு காலமே.
**** ***
பிணக்குவியலை சுமந்த எங்கள் பூமியே!
நீ கண் உறங்காமல் மரத்துப் போனதேன் தாயே!!!

பிணங்களின் தேசத்தில் பால் முகம் மாறாத பாலகனும் பகடைக்காய் ஆனதாலோ!

குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடிய தாயே…
குண்டு பட்டு குழந்தை நிரந்தரமாக உறங்குவதை நீ உனர உயிர் இல்லையே!

வானத்தில் மழை பொழியும் என்று தானே அறிந்தோம் ..
ஆனால் என் இனத்திற்கு மட்டும் அது குண்டாக மாறியதேனோ!

சொந்த மண்ணிலே அடிமைகளான சோகங்கள் தானோ..
அந்நிய மண்ணிலே அகதிகளான பாரங்கள் தானோ…..
அப்பாவி எங்கள் கனவு தேசம்…
கண்ணீர் தேசமானது துரோகத்தால் தானோ…
ஈழத்தமிழன் மட்டும் ஈனப்பிறவிகளானோமோ!

இரத்த சகதியில் விளைந்த நறுமண விதைகளே……
இன்னும் சுடுகாட்டின் வாசனை சுமப்பதேனோ….
உலகின் மாபெரும் மயான பூமி முள்ளிவாய்க்கால் மண்ணே நீதானே!! நீதானே!!!

ஊன்றப்படவில்லையோ இனப்படுகொலை எனும் மனசாட்சி பலகை!

அநாதை மழலைகளும் விதவை தாய்களும்
சிதைந்த சொந்தங்களும் விலையாகி நிற்கிறாள் தாய் மண்ணிலே!

பல புறமும் பறப்பட்ட சூழ்ச்சியே
துப்பாக்கி தோட்டாக்களாக துளைத்து சிதறியதேனோ அப்பாவி இதயங்களே!

கற்பழிப்பும் கொலையும் மனித வேட்டையும் சித்ரவதையும் இங்கு தேசிய விளையாட்டாக மாறிபோனதேனோ….
துரோகத்தின் திருவிளையாடல் தானோ!

தமிழ் மண்ணே தமிழ் மண்ணே….
கொன்றொழிக்கப்பட்டது
தமிழினம் மட்டும் இல்லையே யுத்ததர்மங்களும் தானே!

உதைத்தாலும் சிதைத்தாலும் கொன்று குவித்தாலும் கேட்க நாதியில்லாததேனோ…
தமிழன் என்ற சொல்தான் காரணமோ!

அழைக்கும் தூரத்தில் ஆறு கோடி உறவுகள்
வாழ்ந்தார்களாமே….
அழித்தொழிக்கபட்டு அனுதினமும் ஒலித்த அன்பின் அழுகுரல் ஒலங்கள்
அவர்கள் செவிகளில் விழவில்லையோ…..
ஆத்திரத்தில் பொங்கி எழவில்லையோ!

புதைத்த இடத்திலே வாழ்கிறானே ஒர் இனம்
அவன் தானே ஈழத்தமிழினம்…….

உரிமைக்காக போராடி உயிர்களை விதைத்திருக்கிறது எம் இனம்…
அறுவடை செய்ய காத்திரு___காலமே.

– கயல் லதா-