சுஷ்மாவுக்கு குடும்பத்தினரின் சிறுநீரகம் பொருந்தவில்லை: தானம் கொடுப்பதாக வாலிபர் அறிவிப்பு

308 0

201611171154214334_sushma-kidney-did-not-match-his-family-after-young-man_secvpfமத்திய மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு அவரது குடும்பத்தினரின் சிறுநீரகம் பொருந்தாததால் வாலிபர் ஒருவர் தானம் கொடுக்க முன்வந்துள்ளார்.மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதும் அதன் காரணமாக சிறுநீரகம் செயல் இழந்ததும் தெரியவந்தது.

இதற்காக அவருக்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சுஷ்மாவுக்கு சிறுநீரகம் செயல் இழந்து விட்டதால் அதற்கு நிரந்தர தீர்வாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று எய்ம்ஸ் டாக்டர்கள் அவரிடம் தெரிவித்தனர்.

இதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் சிறுநீரக நோய் பிரிவு சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் சுஷ்மாவுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்து வருகிறார்கள்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு இன்னொருவரது சிறுநீரகம் தேவை. நெருங்கிய குடும்பத்தினர் ரத்த குரூப் பொருந்தினால் தான் அவர்களிடம் இருந்து சிறுநீரகம் தானம் பெற முடியும். பொருந்தவில்லை என்றால் அடுத்தவரிடம் இருந்துதான் சிறுநீரகம் தானம் பெற வேண்டும்.

சுஷ்மாவின் ரத்த குரூப் ‘பி பாசிட்டிவ்’ வகை ஆகும். அவரது குடும்பத்தினர் ரத்த குரூப் பரிசோதித்து பார்க்கப்பட்டதில் யாருடைய ரத்த குரூப்பும் பொருந்தவில்லை. எனவே வெளி நபரிடம் இருந்துதான் தானம் பெற வேண்டி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் வெளிப்படையாக தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் தனக்கு டயாலிசிஸ் அளிக்கப்பட்டு வருகிறது. மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பரிசோதனைகள் நடைபெறுகிறது. நான் பூரண குணமடைய கடவுள் கிருஷ்ணர் ஆசிர்வதிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே சுஷ்மாவுக்கு சிறுநீரகம் தானம் தர தயார் என்று ராகுல் வர்மா என்பவர் டுவிட்டரில் அறிவித்துள்ளார். தனது ரத்தம் ‘பி பாசிட்டிவ்’ என்பதால் உங்களுக்கு விருப்பம் இருந்தால் எனது சிறுநீரகத்தை தானமாக தர தயாராக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.