கொழும்பில் சதித்திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன

296 0

colomboஇனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வந்த டான் பிரியசாத் என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத் நேற்று கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரை கைது செய்த பின்னர் எப்படி அமைதியின்மையை ஏற்படுத்தலாம், அதன் மூலம் எவ்வாறு கலவரத்தை ஏற்படுத்தலாம் எனவும் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு கொழும்பில் சதித்திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

டான் பிரியசாத்தை கைது செய்வதற்கு முன்னர் அவர் காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். குறித்த காணொளியில் அவர் தெரிவித்துள்ளதாவது,

அனைவருக்கும் வணக்கம், வெல்லம்பிடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்னை பொலிஸ் நிலையத்திற்கு வர சொல்லி இருக்கின்றார். அதில் அரசியல் சதிகள் இருக்கலாம். அரசியல் பின்னணியுடனேயே இவை நடைபெறுகின்றது.

நான் எனது குடும்பத்தையும் விட்டு விட்டு நான் வந்துள்ளேன். எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம், எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு பொலிஸாரே பொறுப்பு.

எனக்கு எது நடந்தாலும் நான் முன்னெடுத்த போராட்டத்தை நிறுத்திவிடக்கூடாது, சிங்கள மக்களுக்காக அனைவரும் ஒன்று திரள வேண்டும். நான் நீதியை மதிப்பவன் அதனாலேயே பொலிஸ் நிலையம் செல்லவுள்ளேன்.

எனக்கு எது நடந்தாலும் விட்டு விடக்கூடாது, எனக்காக இளைஞர்கள் ஒன்று திரண்டு வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். இன்னும் சிறிது நேரத்தில் நான் பொலிஸ் நிலையம் சென்று விடுவேன். என நாட்டை குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

இதேவேளை குறித்த காணொளி வெளியிடப்பட்ட பின்னரே அவர் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஞானசார தேரர் கொழும்பில் இளைஞர்களை திரட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் அவர் கருத்து தெரிவிக்கும் போது,

வடக்கிலும் சிங்களவர்களை தாக்குகின்றார்கள், கிழக்கிலும் தாக்குகின்றார்கள் தெற்கிலும் தாக்குகின்றார்கள், சிங்களவர்களுக்கு அடிமேல் அடி விழுகின்றது.

இது வரை பொறுமையாகவே உள்ளோம், நாளை வரை உங்களுக்கு அவகாசம் தருகின்றோம், அதற்குள் தீர்வு காணுங்கள். அப்படி இல்லையெனில் இரத்தங்களால் இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ளவும் நாம் தயார்.

எமது சிங்களவர்களை காப்பாற்ற 100 அல்லது 200 பேர் இறந்தாலும் பரவாயில்லை அதற்கும் நாம் தயார் அந்த நிலைமை ஏற்பட வேண்டும் என்றா எதிர்பார்க்கின்றீர்கள்? உங்களது வீண் பேச்சுக்களை நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லாவிடின் நடப்பது வேறு.

கைது செய்யப்பட்ட இளைஞரையும் விடுவிக்க வேண்டும். என்று இனவாதத்தோடு பயங்கரமான கருத்துகளை ஞானசார தேரர் வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு காணொளிகளும் சமூக வலைத்தளங்கள் ஊடாக தற்போது வேகமாக பரப்பப்பட்டு வருகின்றது.

கைது செய்யப்பட முன்னரே ஒன்று திரண்டு போராட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விட்டு சிறை சென்றுள்ளார் ஒருவர், அதன் பின்னர் இளைஞர்களுடன் ஒன்று திரண்டு வந்து பயங்கர எச்சரிக்கை விடுத்துள்ளார் தேரர்.

இதன் மூலமாக இவை அனைத்தும் திட்டமிட்டு, நாட்டை குழப்பும் நோக்கத்தோடு செயற்படுத்தப்பட்டு வரும் சதித்திட்டங்கள் என தென்னிலங்கை அவதானிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.