வவுனியாவில் ஊரடங்கு தளர்வு குறித்து பொதுமக்கள் அச்சம்!

265 0

வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளமை குறித்து பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த கடற்படை வீரர் வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளதுடன் பொதுமக்களுடன் தொடர்புகளையும் பேணியுள்ளார். அதற்கமைய அவரது வசிப்பிடமான மகாகச்சகொடி பகுதி மாத்திரம் முடக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புகளைப் பேணிய சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதுடன் ஊரடங்குச் சட்டத்தை மாவட்டம் தழுவிய ரீதியில் தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை மக்கள் முன்வைத்துள்ளனர்.

எனினும், வவுனியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை தொடர்வதற்கான எந்தவொரு அறிவிப்பும் மாவட்ட நிர்வாகத்தினால் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அத்துடன், குறித்த கடற்படை வீரருடன் தொடர்புகளைப் பேணிய சிலர் அரச உத்தியோகத்தர்களாக பணியாற்றும் நிலையில் அவர்கள் மக்களுடன் தொடர்பைப் பேணியமை தொடர்பாகவும் வெளிப்படுத்தப்படவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையிலேயே மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரை தொடர்பாக சிறிலங்கா  கவனமெடுக்காத நிலையில் இன்று வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிப்பதுடன் இதனால் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக அச்சம் வெளியிட்டுள்ளது.