சிறிலங்கா பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் “பெப்ரல்” என்ன சொல்கிறது!

397 0

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்ட விதிமுறைகளை மாத்திரம் கவனத்தில் கொள்வது பொறுத்தமாகாது.

எனவே இது தொடர்பில் கொவிட்-19 தேசிய செயற்பாட்டு மையம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரது நிலைப்பாடுகளை பெற்றுக்கொள்வதும் அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பெப்ரல் அமைப்பு, தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம், ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு, கபே அமைப்பு, தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம், சுதந்திரமானதும் சாதாரணமானதுமான தேர்தலுக்கான மத்திய நிலையம் உள்ளிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

இம் மாதம் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்தல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஒத்திவைக்கப்பட்டது.

இது தொடர்பில் தற்போது தோன்றியுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பில் இலங்கையில் செயற்படுகின்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த அறிக்கையை வெளியிடுகின்றன.

வைரஸ் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியான சூழலில் காலத்திற்கேற்றவாறு தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானத்தை நாம் வரவேற்கின்றோம்.

இதேவேளை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தை அமைத்து அதன் மூலம் நாட்டில் ஏற்படவிருந்த பாரிய பாதகமான நிலைமைகளை தடுக்கும் வகையில் உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

அத்தோடு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தல் குறித்து இரு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியின் அவதானத்தை நோக்காகக் கொண்டு ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அதேவேளை அதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி செயலாளரினால் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள சட்ட ரீதியானதும் மற்றும் சட்ட விதிமுறைகள் பற்றி மீண்டும் வலியுறுத்துவதோ அல்லது அது தொடர்பில் எழுந்துள்ள விவாதத்திற்கு பங்களிப்பு செய்வதோ எமது கூட்டு அறிக்கையின் நோக்கம் அல்ல.

கண்காணிப்பு நிலையங்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்காக பிரதான காரணியாவது, தேசிய பேரிடரில் இருந்து மீண்டு அரசியலமைப்பினால் மீண்டுமொரு நெருக்கடி ஏற்படுவதற்கு காணப்படும் மிகச் சிறிய சந்தர்ப்பத்தைக் கூட இல்லாமலாக்குவதாகும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள செயற்பாடுகளில் தேர்தல் நடவடிக்கைகளும் ஒன்றாகும். இதன் காரணமாக உலகலாவிய ரீதியில் சுமார் 30 தேர்தல்கள் இடம்பெறுவது நிச்சயமற்றதாகியுள்ளது.

அதற்கமைய எமது பொது அவதானமானது நாட்டில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் நிறைவேற்றதிகாரத்திற்கான பொறுப்புக்கள் தீவிரமாக அதிகரித்துள்ளன என்பதாகும்.

நிறைவேற்றதிகாரம் நிச்சயமாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள் பற்றி அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக இவ்வாறான நெருக்கடியான நிலைமைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படவேண்டும்.

இந்நிலையில் பொதுத் தேர்தலானது நிறைவேற்றதிகாரத்துக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகளுடனான பின்னணியில் இடம்பெறும் விடயமல்ல.

வைரஸ் பரவல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் உணர்வுடன் செயற்பட வேண்டிய சூழலே தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் அரசியல் ரீதியாக செயற்படுவது கைவிடப்பட வேண்டிய விடயமாகும்.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள பின்னணியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் பலர் இந்த சந்தர்ப்பங்களை தம்மை பிரபல்யப்படுத்திக் கொள்ளும் வகையில் செயற்படுகின்றமையை நாம் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றோம்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு காணப்படும் வரையறை பற்றி நாம் அறிவோம்.

வைரஸ் பரவலின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட பொறிமுறைகள் முன்னெடுக்கப்படுகின்றன. உண்மையில் மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் தேர்தல் நோக்கமின்றி அந்த பொறிமுறைகளில் இணைந்து கொள்ள முடியும். இது தொடர்பில் அவதானம் செலுத்த கட்சி தலைவர்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறான நிலையில் தேர்தலை நடத்துவது குறித்து சட்ட விதிமுறைகள் மாத்திரம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையல்ல. சுகாதார அதிகாரிகளின் நிலைப்பாடு மற்றும் முடிவுகள் என்பன பற்றியும் அவதானம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் எமது பொது நிலைப்பாடானது கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் மற்றும் உரிய சுகாதாரத்துறையினரின் உறுதிப்படுத்தல் என்பவற்றையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

தேர்தல் நடைபெறும் போது சட்ட திட்டங்கள் விதிமுறைகள் பற்றி அவதானம் செலுத்த வேண்டியது ஆணைக்குழுவின் பொறுப்பாகும். எவ்வாறிருப்பினும் மக்கள் நலன் சார்ந்த முடிவொன்றே எடுக்கப்பட வேண்டும் என்று நாம் உரிய தரப்பினரிடம் கோருகின்றோம்.

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது தேர்தலை நடத்துவதால் மாத்திரமல்ல. எனவே நாட்டின் அனைத்து வாக்காளர்களதும் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் காலத்தில் தேர்தலை நடத்துவது உரியதாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.