கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட முயற்சிகள் – சஜித்

225 0

நாட்டில் கொரோனா வைரஸினால் நிலவும் நெருக்கடியான நிலையை பயன்படுத்தி ஜனநாயகத்தை மழுங்கடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்ட அவர், இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டியதுடன் இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பலர் அத்தியாவசிய உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றார்கள் என சுட்டிக்காட்டிய அவர், இந்நிலை தொடர்ந்தால் நாட்டில் இனிவரும் காலங்களில் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் பாரிய தட்டுப்பாடு நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையை கருத்திற்கொண்டு நாட்டுமக்கள் வாழ்வதற்கான அனைத்து சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று வலியுறுத்திய அவர், ஆனால் இந்நிலையை சாதகமாக பயன்படுத்தி ஜனநாயகத்தை மழுங்கடிக்கவும் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டும் முயற்சிகளை அவதானிக்க முடிவதாகவும் குற்றம் சாட்டினார்.