நிவாரணம் வழங்க விசேட பொறிமுறை தேவை- மஹிந்த

229 0

நாட்டின் அவசர சூழ்நிலையைப் பயன்படுத்தி பிரசார நடவடிக்கையாக நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் வேட்பாளர்கள் ஈடுப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொறிமுறையை செற்படுத்த விசேட திட்டம் ஒன்று அவசியம் என அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போதைய சூழலில் தமக்கான பிரசார நடவடிக்கையாக நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஆளுநர்கள், அமைச்சின் செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள் மற்றும் கள அலுவலர்கள் பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

ஒரு சில அரசியல்வாதிகள் இந்த சந்தர்ப்பதில் அரசியல் இலாபம் பெற முயற்சிப்பதை தடுத்து நிறுத்துமாறும் மஹிந்த தேசப்பிரிய குறித்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.