கொரோனா தடுப்பு பற்றி சம்பந்தன் நீண்ட ஆலோசனை: உதயன் விளம்பரத்தை காண்பித்து ஒரே வரியில் முடித்த மஹிந்த

269 0

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களி்ன் சடலங்களின் இறுதிக்கிரியை குறித்து தனிமையில் பேச வேண்டுமென முஸ்லிம் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை பிரதமர் மஹிந்த நிராகரித்துள்ளார்.

இதேவேளை, உதயன் பத்திரிகையில் வெளியான மத ஆராதனை விளம்பர துணுக்கையும் மஹிந்த ராஜபக்ச காண்பித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பினரையும் மஹிந்த சுட்டிக்காட்டினார்.

நேற்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்தது.

கட்சித் தலைவர்கள கூட்டத்தின் ஆரம்பத்திலேயே, தொற்று நோயால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது குறித்து தனிமையில் பேச வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச அந்த கோரிக்கையை நிராகரித்தார். நான் வைத்தியர் அல்ல, இந்த விடயத்தில் வைத்தியர்கள், துறைசார்ந்தவர்களின் முடிவின் படியே செயற்பட முடியும். துறைசார்ந்தவர்களும் இங்கு இருப்பதால், இங்கேயே இந்த விடயத்தை பேசலாம் என மஹிந்த கறாராக தெரிவித்துள்ளார்.

பின்னர், இதற்கான குழுவொன்றை நியமித்து முடிவெடுக்கலாமென முஸ்லிம் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையையும், மஹிந்த தட்டிக்கழித்தார்.

நாடாளுமன்றத்தை மீள கூட்ட வேண்டும், ஜூன் ஆரம்பத்தில் ஜனாதிபதி நிதி அதிகாரத்தை இழந்து விடுவார், நாடாளுமன்றத்தை கூட்டி தேவையான சட்டவிதிகளை உருவாக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பினனர் கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக பின்னர் ஆராயலாம். இந்த கூட்டத்தில் சட்ட வல்லுனர்கள் யாருமில்லாததால், சட்ட வல்லுனர்களை கூட்டி இதை பிறிதொரு கூட்டத்தில் ஆரயலாம் என்றார். அத்துடன், கொரோனா தடுப்பு செயலணியுடன் ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிரமமான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து தர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இரா.சம்பந்தன் பேசியபோது, இராணுவம் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களின் அர்ப்பணிப்பை பாராட்டியதுடன், பின்னர் அரசின் சில நடவடிக்கைகள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, உதயன் பத்திரிகையில் வெளியான பெந்தகொஸ்த சபையின் கொரோனா தடுப்பு மத வழிபாட்டு ஆராதனை தொடர்பான விளம்பரத்தின் பிரதியை எடுத்துக் காண்பித்து, “கொரோனா அபாயமுள்ள இந்த காலகட்டத்தில் அனைவரும் பொறுப்பாக இருக்க வேண்டும். உங்கள் பத்திரிகைகளில் இப்படியான விளம்பரங்களை பிரசுரிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் அந்த ஆலோசனைகளையும் வழங்குங்கள்“ என்றார்.

இதேவேளை, உதயனில் வெளியான விளம்பரம் அரியாலை மத போதகருடைய விளம்பரம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இராசாவின் தோட்டத்தில் நடக்க திட்டமிடப்பட்ட வழிபாட்டு விளம்பரத்தையே உதயன் பிரசுரித்திருந்தது. எனினும், யாழ் பிரதேச செயலாளர் தலையிட்டு அந்த நிகழ்வை தடுத்து நிறுத்தினார். மக்கள் கூடக்கூடாது என்ற சுகாதார அறிவுறுத்தல் இருந்த காலப்பகுதியில் மக்களை கூட்டும் விளம்பரத்தை பிரசுரித்தது தவறு என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்ச நேற்று சுட்டிக்காட்டியிருக்கக்கூடும்.