மருந்துக் கலவையாளர் நியமனத்தில் கிழக்கு மாகாணத்திற்குப் பாராபட்சம்-ஹாபிஸ் நசீர் அகமட்

348 0

downloadஇலங்கையில் மத்திய சுகாதார அமைச்சகத்தால் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மருந்து கலவையாளர்களை பகிர்ந்தளிப்பதில் கிழக்கு மாகாண சபைக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநர் நாயகம் ஆகியோரை தொடர்பு கொண்டு தனது அதிருப்தியை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

மத்திய சுகாதார அமைச்சினால் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவாகி பயிற்சியை முடித்துக் கொண்ட 380 பேருக்கு நாடு தழுவியதாக மருந்துக் கலவையாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் மருந்துக் கலவையாளர்களுக்கு ஏற்கனவே 59 வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் இரு வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆணையே புதிதாகக் கிடைத்துள்ளதாக மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.

புதிதாக 19 பேருக்கு நியமனத்தை வழங்கியுள்ள மத்திய சுகாதார அமைச்சு ஏற்கனவே சேவையிலுள்ள வெளிமாகாணங்களை சேர்ந்த 17 பேருக்கு இடமாற்றம் வழங்கும் கட்டளையையும் பிறப்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் யாப்பு 13ஆவது திருத்தத்தின் படி சுகாதார சேவை மாகாண சபைக்குரிய அதிகாரமாகும்.
மத்திய சுகாதார அமைச்சின் இந்த செயற்பாடு அந்த அதிகாரத்தை கொச்சைப்படுத்தும் செயல் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சால் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 17 பேரையும் விடுவிக்க வேண்டாம் என மாகாண சுகாதார அமைச்சுக்கு முதலமைச்சரால் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.