ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில்

259 0
ஓய்வூதிய கொடுப்பனவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் கூட்டமொன்று இன்று (29) இடம் பெற்றுள்ள நிலையில் இதன் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி தபால் நிலையங்கள் அல்லது வங்கி கணக்கின் ஊடாக ஓய்வூதியங்களைப் பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தபால் அலுவலகங்கள் ஊடாக ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளும் ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கு அல்லது கிராம சேவை பிரிவிற்கு தபால் திணைக்களத்தினால் கொண்டு வந்து தரப்பட உள்ளது.

வங்கி கணக்கு ஊடாக ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள கூடிய ஓய்வூதியதாரர்களின் பணம் குறித்த வங்கி கணக்கில் ஏப்ரல் 2ம் திகதி அல்லது 3ம் திகதிகளில் வைப்பிடப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

வங்கி கணக்கு ஊடாக ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளும் நபர்களுக்கு கிராம உத்தியோகத்தர், முப்படையினர் அல்லது பொலிஸாரினால் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், போக்குவரத்து வசதிகள் தொடர்பில் கிராம அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து வங்கிகளும் குறைந்தபட்சம் ஒரு கிளையையாவது இத்தினங்களில் திறந்து வைக்க அரச மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்கள் இணங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.