தொலைபேசி மூலம் விசாரித்து 23 பேருக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு நீதிபதி

337 0

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ளதால், தொலைபேசி வழியாக வழக்குகளை விசாரித்து 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவிட்டுள்ளார்.குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பவர்கள் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுக்களை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா விசாரித்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சென்னை ஐகோர்ட்டு உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட்டுகள் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை இழுத்து மூடப்பட்டுள்ளது.இந்தநிலையில், ஜாமீன் கேட்டும், ஏற்கனவே பெற்ற ஜாமீனில் விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட 58 அவசர வழக்குகள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு இருந்தது.

ஐகோர்ட்டு இழுத்து மூடப்பட்டு இருப்பதால், இந்த வழக்குகளை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, தனது வீட்டில் இருந்தபடியே விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் குற்றவியல் வக்கீலின் கருத்தை கேட்கவேண்டி இருந்தது. ஆனால், ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை.

இதையடுத்து தொலைபேசியில், குற்றவியல் வக்கீல் டி.பிரபாகரிடம், நீதிபதி வழக்கு குறித்து கருத்து கேட்டார். அவர் தெரிவித்த பதிலின் அடிப்படையில், 58 வழக்குகளை விசாரித்தார். இதில், கொலை, கொலை முயற்சி, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சிக்கிய 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

அதாவது இவர்களுக்கு வருகிற ஏப்ரல் 27-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்குவதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் இவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் இதற்காக இடைக்கால ஜாமீன் பெற்ற 23 பேரும் தலா ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீன் உத்தரவாதம் வழங்கவேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும், ஏற்கனவே பெற்ற ஜாமீனில் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று வெவ்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, 3 பேரின் ஜாமீன் நிபந்தனைகளையும் தளர்த்தி உத்தரவிட்டார்.