கரோனா வைரஸ் பாதிப்பு; சீனா அனுப்பிய மருத்துவ உபகரணங்களைத் திருப்பியனுப்பும் ஸ்பெயின்: காரணம் என்ன?

231 0

கரோனா வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய சீனா அனுப்பிய மருத்துவ உபகரணங்கள் சரிவர வேலைசெய்யாத காரணத்தால் ஸ்பெயின் அந்த உபகாணங்களைத் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்புக்கு சுமார் 4,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 57 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட சீனா அதிலிருந்து மீண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகளுக்கு மருத்துவ உதவிகளைச் செய்யும் பணியில் அந்நாடு ஈடுபட்டுள்ளது. ஸ்பெயினுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியது.

இந்நிலையில் சீனா வழங்கிய மருத்துவ உபகரணங்கள் கோவிட்-19 காய்ச்சல் தொற்றை சரியாக உறுதிப்படுத்தத் தவறுகிறது என்று ஸ்பெயின் கூறியது. இதனையடுத்து, சீனாவின் மருத்துவ உபகரணங்களை திருப்பி அனுப்பா ஸ்பெயின் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஸ்பெயினில் உள்ள நுண்ணுயிறியல் ஆய்வு நிறுவனம் கூறும்போது, “சீனா அனுப்பிய மருத்துவ உபகரணங்கள் எதிர்பார்த்தபடி கரோனா வைரஸ் பாதிப்பு முடிவுகளை சரியாகக் கணிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்பெயினில் உள்ள சீனத் தூதரகம் கூறும்போது, “இந்த உபகரணங்கள் சமீபத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது அல்ல. மேலும், இந்த மருத்துவ உபகரணங்கள் காப்புரிமை பெறாத நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு சுமார் 5,32,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24,090 பேர் பலியாகியுள்ளனர்.