ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா – உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா

243 0

ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையில் சீனா மற்றும் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 3 லட்சத்து 82 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 976 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் சீனா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் நிலை கொண்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் பயங்கர வேகத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 15 ஆயிரத்து 461 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 672 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 182 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 209 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முண்ணனியில் இருந்த சீனாவையும் (81 ஆயிரத்து 285 பேர்) இத்தாலியையும் (80 ஆயிரத்து 589 பேர்) பின்னுக்கு தள்ளி வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற எண்ணிக்கையில் (83 ஆயிரத்து 672 பேர்) உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.