சோமாலியா: ராணுவம் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 12 பேர் பலி

26 0

சோமாலியாவில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

சோமாலியா நாட்டில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் சோமாலிய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் பெய் மாகாணத்தில் உள்ள ராணுவத்தளத்தை குறிவைத்து அல் ஷபாப் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த மோதல் சம்பவத்தில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 10 பயங்கரவாதிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ராணுவம் தரப்பில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.