உடன்கட்டை ஏறுவாரா மைத்திரி? – புகழேந்தி தங்கராஜ்

340 0

mulliகிழக்கு திமோர் விடுதலை தொடர்பான சென்ற வார கட்டுரை (தந்தையர் நாடும் தமிழீழமும்) நண்பர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. நண்பர்களின் எதிர்வினை ஒரேமாதிரியாகவும் இல்லை. ஒன்றோடொன்று முரண்படுகின்றன.

கிழக்கு திமோர் போன்று ஈழத்திலும் பொதுவாக்கெடுப்பு நடக்க வாய்ப்பிருக்கிறதா? அப்படியொரு பொதுவாக்கெடுப்பு நடந்தால் ‘தமிழீழம் தான் வேண்டும்’ என்கிற தெளிவான முடிவைத் தமிழீழ மக்கள் எடுப்பார்களா? ‘விடுதலைக்காக வாக்களியுங்கள்’ என்று ஈழத்திலுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் ஒரே குரலில் வலியுறுத்துவார்களா? 250 பேர் கொல்லப்பட்ட சான்டாகுரூஸ் படுகொலை கிழக்கு திமோர் விடுதலைக்கு வழிவகுத்திருக்கிற நிலையில் ஈழத்தில் 2009ல் நடந்த இனப்படுகொலை அப்படியொரு திருப்புமுனையாக ஏன் அமையவில்லை? இவை நண்பர்களின் கேள்விகளில் சில.

இந்தக் கேள்விகள் பலவற்றுக்குப் பதிலளிக்கிற விரிவான விளக்கம் ஒன்றை இலங்கை இடதுசாரிச் சிந்தனையாளர் சுரேந்திர அஜீத் ரூபசிங்க அண்மையில் வெளியிட்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன் ‘கொழும்பு டெலிகிராப்’ இதழில் அது வெளியாகியிருக்கிறது. (சுரேந்திர அஜீத்தின் ஆக்கத்தை மின்னஞ்சல் செய்திருக்கும் நண்பர் மோகனுக்கு நன்றி!)

‘கிழக்கு திமோரும் இலங்கையும் ஒன்றல்ல…..
இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது உண்மை….
ஆனால் கிழக்கு திமோர் என்பது வரலாறு கற்பிக்கும் பாடம்…
அதிலிருந்து கற்கவே மாட்டோம் என்று அடம்பிடிக்கக் கூடாது….
நம்முடைய (சிங்கள) பேரினவாத பாசிச மனோபாவம் நீடித்தால் கிழக்கு திமோர் நிச்சயமாக நம் (இலங்கையின்) வாசலில் வந்து நிற்கும்’….

இது ரூபசிங்கவின் வெளிப்படையான எச்சரிக்கை.

‘நான் பிரிவினையை ஆதரிப்பவனில்லை. ஆனால் தமிழருக்கு இருக்கிற சுய நிர்ணய உரிமையை ஆதரிப்பவன். தமிழ் இனத்துக்கான உண்மையான ஜனநாயக சுதந்திரம் என்பது இந்த சுய நிர்ணய உரிமைதான். ஒரு தேசியப் பிரச்சினையை ஜனநாயக வழியில் தீர்த்துக்கொள்ளத் தவறினோமென்றால் கிழக்குத் திமோரில் நடந்தது இங்கும் நடக்கலாம்’ – என்று மனசாட்சியோடு எழுதியிருக்கிறார் சுரேந்திர.

சுரேந்திரவின் இந்தக் கருத்தாக்கம் ‘Emerging scenarios of an Independant State of Tamil Ealam: Lessons from East Timor’ என்கிற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. சுரேந்திர என்ன சொல்ல வருகிறார் என்பதை அந்தத் தலைப்பே தெரிவித்துவிடுகிறது.

யாழ்ப்பாணத்தில் நடந்த எழுகதமிழ் பேரணியில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் திரண்டதை மிக முக்கிய அறிகுறியாகப் பார்க்கிறார் ரூபசிங்க. ‘எழுக தமிழ் – நீதியையும் ஜனநாயக உரிமைகளையும் வலியுறுத்துகிற வலுவான குரலாக இருந்தது. தமிழ் மக்களின் இந்த நியாயமான குரலைக் கொச்சைப்படுத்த முயல்வது தமிழீழ விடுதலைக்கான குரலை வலுப்படுத்திவிடும்’ என்கிற யதார்த்தமான எதிர்வினையையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நீண்ட நெடுங்காலமாக நிலவுகிற சிங்கள மேலாதிக்க மனோபாவத்தை நன்றாக அறிந்துவைத்திருக்கிறார் ரூபசிங்க. அதனாலேயே ‘தமிழரின் நியாயமான விருப்பங்களையும் தேசிய ஜனநாயக உரிமைகளையும் காக்க இலங்கை முயலுமென்கிற நம்பிக்கை எனக்கு இல்லை…..’ என்கிறார் வேதனையுடன்!

பிரச்சினையைத் திசை திருப்ப சிங்களப் பேரினவாதம் என்ன செய்கிறது – என்பதைத் தமிழ் அரசியல் தலைவர்களுக்குச் சுட்டிக்காட்டவும் சுரேந்திர தவறவில்லை. ‘புதிய அரசியல் சாசனம் என்பதெல்லாம் வார்த்தைத் தந்திரம்’ என்பது அவரது குற்றச்சாட்டு. ‘புதிய அரசியல் யாப்பு என்றெல்லாம் சிங்களத் தலைவர்கள் பேசுவது அப்பட்டமான மோசடி’ என்பது அதன் நேரடி அர்த்தம்.

இலங்கை இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவது இன்றோ நேற்றோ நடப்பதல்ல. தந்தை செல்வாவுக்கு எழுத்துமூலம் கொடுத்த வாக்குறுதிகளைக் கிழித்து எறிந்துவிட்டுத் தமிழினத்தின் முதுகில் குத்திய பண்டாரநாயகவின் 1957 துரோகத்திலேயே தொடங்கிவிடுகிறது இந்த மோசடி. அந்த மோசடியின் இன்னொரு பரிணாமம்தான் 1987ல் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்குக் கொடுத்த வாக்குறுதிகளை ஒரு சுண்டைக்காய் நாட்டின் அதிபர் ஜெயவர்தன குப்பைத்தொட்டியில் தூக்கியெறிந்தது.

தன்னை ஒரு ஆகப்பெரிய வல்லரசுத் தலைமையாகவே கருதிய இந்தியாவின் தலையிலேயே மசாலா அரைத்த சிங்களப் பேரினவாதத்தின் நிஜமுகம் இது. இதைச் சுட்டிக்காட்டுகிற விதத்திலேயே நேர்படப் பேசுகிறார் ரூபசிங்க. ‘அரசியல் யாப்பில் மாற்றம் – என்று சொல்வதெல்லாம் வெறும் மோசடி’ என்பது அவரது வாதம்.

சுரேந்திர அஜீத் ரூபசிங்கவின் அழுத்தந்திருத்தமான எழுத்து 5 உண்மைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ அம்பலப்படுத்துகிறது.

1. கிழக்கு திமோர் விடுதலை வரலாற்றிலிருந்து இலங்கை பாடம் கற்கவில்லை.

2. தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க இலங்கை முயற்சிகூட செய்யப் போவதில்லை.

3. தமிழரின் உண்மையான உரிமை சுய நிர்ணய உரிமை தான்.

4. நீதி கேட்கும் தமிழரின் குரலைக் கொச்சைப்படுத்துவது தனித் தமிழீழக் கோரிக்கையைத்தான் வலுப்படுத்தப் போகிறது.

5. கிழக்கு திமோரில் நடந்ததுதான் ஈழத்திலும் நடக்கப் போகிறது.

நண்பர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முன் அவர்களிடம் திருப்பிக் கேட்கிறேன்….. இவ்வளவுக்கும் பிறகு வன்னிமண்ணில் கிழக்கு திமோரைத் தவிர வேறெது முளைக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

கிழக்கு திமோரில் நடந்ததற்கும் ஈழத்தில் நடந்ததற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே இனப்படுகொலைகள். அங்கே நடந்த இனப்படுகொலைக்காக அங்கே பொதுவாக்கெடுப்பு நடந்ததைப் போலவே இங்கே நடந்த இனப்படுகொலைக்காக இங்கேயும் பொதுவாக்கெடுப்பு நடக்குமென்பது நிச்சயம். இதைத் தாமதப் படுத்த முடியுமே தவிர தவிர்க்க முடியாது. கிழக்கு திமோரில் பொதுவாக்கெடுப்புக்கு 8 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

அப்படியொரு பொதுவாக்கெடுப்பு நடக்கிறபோது கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களின் உறவுகள் அடிமைத்தளையை உடைத்து எறிவார்கள் என்பது நிச்சயம். இந்த விஷயத்தில் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு நிற்பார்களோ இல்லையோ தமிழ் மக்கள் நிச்சயமாக ஒன்றுபட்டு நிற்பார்கள்.

கிழக்கு திமோரில் பொதுவாக்கெடுப்பு நடந்தபோதுகூட ‘இந்தோனேசியாவுக்கு அடிமையாகவே இருப்போம்’ என்று பிரச்சாரம் செய்த தலைவர்கள் அங்கு இல்லாமலிருந்தார்களா என்ன? அவர்களைக் குப்பைத்தொட்டியில் தூக்கியெறிந்துவிட்டுத்தான் வேறு வேலை பார்த்தார்கள் கிழக்கு திமோர் மக்கள். அதுதான் ஈழத்திலும் நடக்கும்.

இதுதெரிந்துதான் ‘கிழக்கு திமோர் நம்முடைய வாசலிலேயே நின்றுகொண்டிருக்கிறது’ என்று எச்சரிக்கிறார் ரூபசிங்க. அதிலிருந்து பாடம் கற்கவேண்டும் என்கிறார். இது சிங்கள அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல அவர்களைத் தூக்கிச் சுமக்க எத்தனிக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் பொருந்துகிற எச்சரிக்கை.

மகிந்த ராஜபக்சவும் கோதபாய ராஜபக்சவும் கிழக்கு திமோரிலிருந்து பாடம் கற்கப் போவதில்லை. இதில் வியப்பதற்கு எதுவுமில்லை. தமிழ் மக்களின் தார்மீகக் கோபத்தைப் பயன்படுத்தியே ராஜபக்சவை வீழ்த்திய மைத்திரிபாலாவும் ரணிலும் கூட கிழக்கு திமோரிலிருந்து பாடம் கற்க மறுப்பதுதான் கொடுமை.

மைத்திரி – ரணிலின் இந்தப் போக்குக்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான்! தங்களுடைய பதவி நாற்காலிகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் மகிந்தனையும் கோதாவையும் காப்பாற்றியாக வேண்டும் என்கிற நெருக்கடியில் இருக்கிறார்கள் இருவரும்!

இனப்படுகொலை செய்த மகிந்தனுக்கும் கோதாவுக்கும் கொள்ளிவைக்க முயன்றால் அவர்களுடன் சேர்ந்து தாங்களும் உடன்கட்டை ஏறவேண்டியிருக்கும் என்பது இருவருக்கும் தெரியும். அப்படியெல்லாம் உடன்கட்டை ஏற அவர்கள் தயாராக இல்லை. இது அவர்களுடன் நெருங்கிப் பழகுகிற தமிழ் அரசியல்தலைவர்களுக்குத் தெரியாததல்ல! உண்மையில் அவர்களைக் காட்டிலும் இவர்கள்தான் எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்.

‘பாடம் கற்க வேண்டும்’ என்று ரூபசிங்க சொல்வதைத்தான் ஒரு வார்த்தை கூட மாற்றாமல் ராஜபக்ச கோஷ்டியும் சொல்கிறது. ஆனால் இருவரின் நோக்கமும் ஒன்றல்ல! இலங்கையில் உண்மையிலேயே அமைதி ஏற்படுத்த வேண்டும் – என்கிற கனவின் எதிரொலியை ரூபசிங்கவின் வார்த்தைகளில் பார்க்க முடிகிறது. இதற்கு நேர்மாறான குரல் கோதபாயவின் குரல்.

‘அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து பாடம் கற்க வேண்டும்’ என்பது கோதபாயவின் அப்டேட் அறிவுரை. டொனால்ட் டிரம்பை ஒபாமா ஆதரிக்கவில்லையாம்….. அதனாலேயே பெரும்பான்மை இனத்தவர் (வெள்ளையர்) ஒட்டுமொத்தமாக டிரம்பை ஆதரித்து வெற்றியடைய வைத்தார்கள் – என்பது கோதாவின் இனவெறிக் கண்டுபிடிப்பு.

அமெரிக்கா போலவே இலங்கையிலும் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்கள் ஒன்றுபட வேண்டும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் அடிமைகளாகவே வைத்திருக்க வேண்டும் – என்கிற இனத்துவேஷ விருப்பத்தை வெளிப்படையாகவே பதிவு செய்திருக்கிறது ராஜபக்ச கோஷ்டி.

தமிழ் மக்களுக்கான உரிமைகளைக் கொடுப்பதன் மூலம் நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் – என்பது ரூபசிங்க என்கிற மனிதனின் கனவாக இருக்கிறது. தமிழ் மக்களுக்கு நீதியை மறுப்பதன் மூலம் பெரும்பான்மை சிங்கள மக்களை மகிழ்வித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் – என்பது கோதபாய என்கிற மிருகத்தின் கனவாக இருக்கிறது. இதுதான் வித்தியாசம்.

ரூபசிங்க போன்ற அறிவார்ந்த இடதுசாரிகள் தர்ம நியாயத்துடன் கூடிய இயல்பான அரசியல் அறிவை பௌத்த சிங்கள மக்களிடையே விதைக்க முயல்கின்றனர். இது கல்லில் நார் உரிக்கிற வேலை. மகாவம்சம் விதைத்திருக்கிற போலியான பொய்யான பௌத்த சிங்கள மேலாதிக்கத் திமிர் இவர்களைப் போன்றவர்களை விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.

ரூபசிங்கவுடன் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான் எனக்கு உடன்பாடில்லை. தமிழர்களுக்கு நியாயம் வழங்குகிற துணிவு சிங்களத் தலைவர்களுக்கு இல்லை – என்று அவர் குறிப்பிடுவது ஓரளவுக்குத்தான் உண்மை. சக பிரஜைகளான தமிழர்களுக்கு சம உரிமையும் நியாயமும் கொடுப்பதை பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்கவே மாட்டார்கள் – என்பதே அடிப்படை உண்மை. அதை ஏற்பவர்களாக இருந்தால் கூப்பிடு தொலைவிலேயே கொன்றுகுவிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் சகோதர உயிர்களுக்கு அவர்கள் நீதிகேட்டிருக்க வேண்டாமா?

விமானத்திலிருந்து நச்சுக் குண்டுகளை வீசிச் சொந்த மக்களைக் கொல்வது நியாயமா – என்று கேட்ட லசந்தவும் ஏக்னலிகோடவும் சிங்களர்கள்தான். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

99.99 சதவிகித சிங்கள மக்கள் லசந்தவுக்கு நேர்மாறானவர்கள். ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை பட்டாசு வெடித்துக் கொண்டாடியவர்கள். சிவத்தம்பி என்கிற தமிழறிஞனின் வீட்டுக் கதவைத் தட்டிப் பால்பாயசம் கொடுத்தவர்கள். அவர்களை நம்பித்தான் கோதபாய பேசுகிறான். அமெரிக்கத் தேர்தலைக் கூட இனத்துவேஷத்தை வலுப்படுத்துவதற்கான காரணியாகப் பயன்படுத்தப் பார்க்கிறான். அவனுடைய வாதம்தான் சிங்கள மக்களிடம் எடுபடும்.

நடக்கிறதோ இல்லையோ ரூபசிங்க காட்டுகிற பாதை – ஒரிஜினல் புத்தனின் அகிம்சை நெறிசார்ந்த அறப் பாதை. புத்தனைக் கடவுளாக்கி சிலையாக நிற்கவைத்துவிட்ட சிங்கள மக்கள் அறம் சார்ந்தோ நெறி சார்ந்தோ நிற்கப் போவதில்லை. போலிப் புத்தர்களையும் கள்ளப் பிக்குகளையும் தான் அவர்கள் நம்பினார்கள் நம்புகிறார்கள் நம்புவார்கள்.

பெரும்பான்மை சிங்களமக்கள் சிகப்பு அங்கவஸ்திரத்தைக் கழுத்தில் சுற்றிக்கொண்டு புத்தபிரான் நடமாடிக் கொண்டிருப்பதாக நம்பத் தொடங்கிவிட்டார்கள். ராஜபக்சக்கள் குளிர்காய்வதற்காக இன்னும் கொஞ்சம் தமிழர்களைக் கொன்று கொளுத்தினாலென்ன – என்கிற அரைவேக்காட்டு அறிவாளித்தனம் 1983 ஜூலையிலேயே அவர்களுக்குள் விதைக்கப்பட்டு விட்டது.

25 ஆண்டுகளுக்கு முன் கோதபாயவின் கொலைத்தொழிலுக்கு ஏகபோக உரிமை கொண்டாடிய லலித் அதுலத் முதலி ‘தமிழர் பிரச்சினை தீர என்ன செய்யப் போகிறீர்கள்’ என்கிற கேள்விக்கு ‘தமிழர்களின் மண்டைகளை உடைக்கப் போகிறோம்’ என்று பதிலளித்ததில் தொடங்கி இன்றுவரை இந்தப் பெரும்பான்மை சிங்கள மனோபாவத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இப்படியொரு நிலையில் ரூபசிங்கவின் கணிப்பும் எச்சரிக்கையும் துல்லியமானது தெளிவானது. கிழக்கு திமோரிலிருந்து பாடம் கற்க மறுக்கிற இலங்கைக்குப் பாடம் கற்பிக்கப் போவது எமது தாயகத் தமிழ் உறவுகள்தான்! இதை யாராலும் தடுக்க முடியாது.

எந்த ராஜபக்சக்களை இனப்படுகொலைக் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்ற இலங்கையும் இந்தியாவும் சர்வதேசமும் முயல்கின்றனவோ அந்த ராஜபக்சக்களைக் கூண்டில் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுக்கிற கடமையும் உரிமையும் இறையாண்மை மிக்க சுதந்திரத் தமிழீழ நாட்டைத் தவிர வேறெந்த நாட்டுக்கு இருக்க முடியும்? எமது நாடு அந்த வரலாற்றுக் கடமையைச் செய்வதை எந்த நாட்டால் தடுக்க முடியும்?

இவையெல்லாம் வெறும் கனவுகளோ ரூபசிங்கவின் ஜோசியமோ அல்ல! ரூபசிங்க சுட்டிக்காட்டும் யதார்த்தத்தின் துணையோடும் 2009ல் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உறவுகளின் நினைவோடும் ஈழத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உற்றுக் கவனிக்கிற எவருக்கும் ‘எம் மக்களின் ரத்தத்தில் தோய்ந்த நிலமனைத்தும் ஈழம்தான்’ – என்கிற மாவீரன் கிட்டுவின் வார்த்தைகளுக்குப் பின்னிருக்கும் வலிதான் விடுதலைக்கான வழி என்பது புரியும்.

விடுதலை கேட்டதற்காக சான்டாகுரூஸில் கொல்லப்பட்ட 250 உயிர்களே கிழக்கு திமோரின் வரலாறாக ஆகிவிட முடியுமெனில் முள்ளிவாய்க்கால் வரை வேட்டையாடப்பட்ட ஆயிரமாயிரம் தமிழ் உறவுகளின் உயிர்த் தியாகம் மட்டும் வீணாகிவிடுமா என்ன?