தனிமைப்படுத்தப்பட்ட தாவடிப் பகுதியில் குவிக்கப்பட்டது இராணுவம்!

37 0

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இனங்காணப்பட்டவர் யாழ்.தாவடிப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அப் பகுதியில் வசிப்போர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் தாவடிப் பகுதிக்குள் இருந்து எவரும் வெளியேயும் வெளியிலிருந்து அப் பகுதிக்குள்ளேயும் எவரும் செல்ல முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டு அப் பகுதி எங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் இன்னும் சில நாட்களுக்கு குறித்த பிரதேசம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் அதிகளவான மனித உயிர்களை அழித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினை இலங்கையில் கட்டுப்படுத்த அரசாங்கம் தனது முழுமையான முயற்சியினை மேற்கொண்டு வருகின்றது.

இந் நிலையில் மக்கள் அரசாங்கத்தின் அனைத்துவிதமான உத்தரவுகளையும் மதித்து நடந்து கொள்வதன் ஊடாக இலங்கையிலிருந்து கொரோனா வைரஸை விரட்டியடிக்க முடியும்.

இலங்கை அரசாங்கம் நாட்டுக்குள் குறித்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் எடுத்திராத கடும் நடவடிக்கைகளை எடுத்த வருவதாக சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.