ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவித்த பொதுமக்கள்

248 0

கொரோனா ஒழிப்பில் சேவை செய்து மருத்துவ பணியாளர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.கொரோனா வைரஸ் கண்ணுக்கே தெரியாமல் தாண்டவமாடும் நிலையில் அதை எதிர்த்து உயிரையும், சமூகத்தையும் காக்க வேண்டிய நிலை மத்திய. மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்காக பிரதமர் மோடி, விடுத்த வேண்டுகோளை ஏற்று மக்கள் ஊரடங்குக்கு அனைத்து தரப்பு மக்களும் முழுமையான பங்களிப்பு வழங்கி கொரோனா என்ற கொடிய வைரசை விரட்ட உறுதியேற்றனர்.

பாதிப்பின் தன்மையை உணர்ந்த தமிழக மக்களும், ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். இதன் ஒரு பகுதியாக கொரோனா ஒழிப்பில் சேவை செய்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சுகாதார துறையினர், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி தூய்மை பணியாளர்கள், சுகாதார பிரிவினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாலை 5 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அவரவர் வீடுகளின் முன்பாக கை தட்டி நன்றி தெரிவித்தனர்.

நேற்று மாலை, வீடுகளின் பால்கனி, வாயில்களில் நின்று கைகளை தட்டியும், மணி அடித்தும், பாராட்டையும், நன்றியையும் வெளிப்படுத்தினர். ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.