துருக்கி, பிலிப்பைன்ஸில் தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசுகள் தெரிவித்துள்ளன.
கோவிட்-19 காய்ச்சல் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 3,08,231 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
இதில் சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் கோவிட்-19 காய்ச்சலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்த நிலையில் கோவிட்-19 காய்ச்சல் தங்கள் நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக துருக்கி மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
இதுகுறித்து துருக்கி உள்துறை அமைச்சகம் கூறும்போது, “துருக்கியில் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 937 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கோவிட் காய்ச்சலுக்கு இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். கோவிட் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பகுதி நேர ஊரடங்கு விரைவில் அமல்படுத்த உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் அரசுத் தரப்பில், “பிலிப்பைன்ஸில் கரோனா வைரஸுக்கு புதிதாக 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிலிப்பைன்ஸில் கோவிட் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ நெருங்க உள்ளது. மேலும் பலி எண்ணிகை 25 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

