விடுதிகளில் இருக்கும் மாணவர்களை அங்கேயே தங்க அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசு

330 0

இன்னும் விடுதிகளிலேயே இருக்கும் மாணவர்கள், அங்கேயே தங்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவாகிய கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதுவரை உலக அளவில் கரோனா வைரஸுக்கு 13 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐத் தாண்டியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் விடுதிகளைக் காலி செய்து, ஊர் திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதனால் பல்வேறு மாணவர்களும் விடுதிகளில் இருந்து சொந்த ஊர் திரும்பினர். எனினும் வெளிநாட்டு மாணவர்கள் உட்பட சில தரப்பினர் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால், வீடு திரும்ப முடியாமல் விடுதியிலேயே தவித்து வந்தனர். இதை அறிந்த மத்திய அரசு அவர்கள் விடுதியிலேயே தங்கி இருக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் அமித் கரே அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ”வெளிநாட்டு மாணவர்கள் உட்பட விடுதிகளில் இன்னும் தங்கியிருக்கும் மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து தங்க அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக யுஜிசி, ஏஐசிடிஇ, என்ஐஓஎஸ், சிபிஎஸ்இ கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி, கல்லூரி, பல்கலை.களின் ஆசிரியர்களும் மார்ச் 31-ம் தேதி வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.