கொரோனாவிலிருந்து பாதுகாக்க தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் – அனந்தி

314 0

கொரோனா தாக்கத்தலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள அரசு என்ற வகையில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகமும் வடமாகாண முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக அச்சநிலைக்குள் வாழ்கின்றபோது இலங்கை அரசு தன்னை ஒரு ஜனநாயக அரசாக காட்ட முயல்கின்ற நிலையில் இன அழிப்புக்கு ஆளாகி இன்றும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள்ளாகியுள்ள ஈழத்தமிழர்கள் சார்பிலும், முன்னாள் வடமாகாணமகளிர், புனர்ழ்வு, சமூகசேவைகள் அமைச்சர் என்றவகையிலும் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

கொரோனா தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள அரசு என்றவகையில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். காரணம் நீண்டகாலம் சிறையில் அவர்கள் வாழ்வதுமட்டுமல்ல இந்தவைரஸ் நோய் தாக்கம் சிறையில் ஒருவருக்கு ஏற்பட்டால் ஏனையவர்களை பாதுகாப்பது கடினமாகும்.

இடநெருக்கடியான இடத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாக இவர்கள் இருப்பதனாலும், வயது, நோய், உடல் உளதாக்கம் இருப்பதாலும் இவர்களை இந்நோய் மோசமாகப் பாதிக்கும் ஆபத்துள்ளது.

உலகமே அச்ச முற்றுள்ள வேளையில் இவர்களுடைய குடும்பங்கள் விரக்தியுடனும் ஏக்கத்துடனும் தங்கள் அன்புக்குரியவர்கள் வருவார்கள் என வழிமேல் விழிவைத்து காத்துநிற்கின்றார்கள்.

இவர்களுடைய விடுதலை ஒருநிபந்தனை அடிப்படையிலோ அல்லது பிணை அடிப்படையிலோ அமையலாம். முடியாதது என்று எதுவும் இல்லை. மனிதாபிமான நோக்கில் இலங்கை மாணவர்களை சீனாவில் இருந்து ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்து அழைத்துவர முடியுமானால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கமுடியாது?

சர்வாதிகார அரசான ஈரான் அரசு தனது அரசுக்கு எதிராக செயற்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுசிறையில் இருந்த இருபதாயிரம் வரையிலான கைதிகளை இந்த நெருக்கடியான சூழலில் விடுதலை செய்துள்ளது. ஜனநாயக அரசாங்கம் என்று தன்னைவகைப்படுத்திக் கொண்ட இலங்கை அரசாங்கம் ஏன் இவர்களை விடுதலை செய்யமுடியாது.

கடந்த ஏப்பிரல் குண்டுத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களாக கருதப்பட்ட பலர் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஏதோ ஒருவகையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எங்கள் உறவுகள் மட்டும் அதே பயங்கரவாத தடைச்சட்டத்தில் பல்லாண்டுகாலம் சிறையில் உள்ளனர்.
எனவே தமிழருக்கு சட்டமும் நீதியும் வெவ்வேறாக பாராது இன நல்லிணக்கம் பேண தமிழ் அரசியல் கைதிகளை இந்த நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி விடுதலைசெய்ய வேண்டும் எனகேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது