மலையகமும் முற்றாக முடங்கியது- நகர் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு!

310 0

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலையுடன் மலையகத்திலுள்ள பிரதான நகரங்கள் முற்றாக முடங்கின.

நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன.

பாதுகாப்புத் தரப்பினரின் பணிப்புரைகளைப் பின்பற்றி, மக்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் பிரதான நகரங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மூன்று நாட்களுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டதையடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நகரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்து, ரயில் நிலையங்களிலும் மக்கள் குவிந்தனர். இதனால் மாலை 6 மணி கடந்தும் நகரங்கள் பரபரப்பாகவே காணப்பட்டன.

எனினும், இன்று பொலிஸ் ஊரடங்கு சட்டத்தின் போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதுடன் பொலிஸாரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, ஹற்றன் நகர் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக கிருமி ஒழிப்பு நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும், அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படும் மருத்துவம், மின்சாரம், நீர்வழங்கல் ஆகிய துறைகளுடன் தொடர்புடைய பணியாளர்கள் இன்று பணியில் ஈடுபட்டிருந்தனர். வைத்தியசாலைகள் இயங்கினாலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.