பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்கும் திருப்பதி நேற்று முதல் பக்தர்களே இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
திருப்பதிக்கு வந்த பக்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருப்பதியில் ஒரு வாரத்துக்கு தரிசனத்திற்கு தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளது.
நேற்று மதியம் 12 மணிக்குள் திருமலையில் தங்கியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் வழங்கப்பட்டு அத்துடன் பக்தர்கள் யாரையும் தரிசனத்துக்கு அனுமதிக்கவில்லை.
அர்ச்சகர்கள், ஊழியர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களும் கோவிலுக்குள் உள்ள படிகாவலி அருகில் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.
தினசரி ஏழுமலையானுக்கு நடக்கும் கைங்கரியங்கள் ஆகம விதிப்படி எவ்வித குறையும் இல்லாமல் நடைபெற்று வருகிறது.
திருமலைக்கு செல்லும் மலை பாதைகள் மூடப்பட்டுள்ளன. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதை வழிகளும் மூடப்பட்டுள்ளது.

ரூ.300 கட்டணம், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்திருந்த பக்தர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி கோவில் 1892-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக தற்போது மூடப்பட்டள்ளது. ஆனால் இப்படி இந்த கோவில் மூடப்படும் என்று விராட் பொத்துலூரி வீர பிரம்மங்கார் என்ற சாமியார் 100 ஆண்டுகளுக்கு முன்பே கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
அதில் காசி விஸ்வநாதர் கோவில் மூடப்படும் நிலை வரும் என்று ஏற்கனவே பிரம்மங்கார் கூறியிருந்தாராம். அதன்படி கடந்த 1910-12-ம் ஆண்டில் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காலரா பரவியபோது பக்தர்கள் 1½ மாதங்கள் காசி விஸ்வநாதரை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதேபோன்று ஏழுமலையான் கோவிலும் மூடப்படும் என்று பிரம்மங்கார் கூறியிருந்தாராம். 128 ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

