கொரோனோ வைரஸ், பறவை காய்ச்சல் காரணமாக முட்டை விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. 15 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் கோழிப் பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 900 பண்ணைகளில் 5 கோடி கோழிகள் மூலம் தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கேரளாவுக்கு 1 கோடி, சத்துணவு திட்டத்துக்கு வாரம் 2 கோடி, உள்ளூர் விற்பனைக்கு 1 கோடி முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் பிராய்லர் கோழி மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது. யாரும் கோழி இறைச்சியை உண்ண வேண்டாம் என மர்ம நபர்கள் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பினர். இந்த தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்டவைகளில் வைரலாக பரவியது.
இதையடுத்து பொதுமக்கள் பீதி அடைந்ததுடன் முட்டை, கோழி இறைச்சியை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். அதனால், அதன் நுகர்வு சரிந்து, விலை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
பண்ணைகளில் முட்டை தேக்கம் அடைந்துள்ளதால் கொள்முதல் விலையை, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு குறைத்தது. அதன்படி கடந்த 14-ந்தேதி 33 காசுகள், நேற்று முன்தினம் 25 காசுகள் என 2 நாட்களில் 58 காசுகள் சரிந்தது. தற்போது ரூ.2.65 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வியாபாரிகள் குறைந்த விலைக்கே, முட்டையை கொள்முதல் செய்கின்றனர். வரலாறு காணாத அளவுக்கு முட்டை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாமக்கல்லில், 1100 கோழிப்பண்ணைகள் மூலம், நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு சத்துணவு மையம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனோ வைரஸ், பறவை காய்ச்சல் காரணமாக முட்டை விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. 15 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் கோழிப் பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆகவே முட்டைகளின் தேக்கத்தை சமாளிக்க ஒரு முட்டை ரூ.2-க்கு விற்பனை செய்ய பண்ணையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு மற்றும் பறவை காய்ச்சல் காரணமாக முட்டை ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் 15 கோடி முட்டை தேக்கம் அடைந்துள்ளது. தேங்கிய முட்டைகளை குறைந்த விலையில் விற்க முடிவு செய்துள்ளோம். மேலும் இந்த அசாதாரணமான சுழலில் கோழிப்பண்ணயாளர்களுடன் கலந்து ஆலோசிக்க உள்ளளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

