அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவனின் வாழ்வு!

84 0

குளிர்
பழக்கமாக்கி கொண்டவனின்
துயர் படி வாழ்வு நிர்கதியாக்கப்படுகிறது.

மூச்சுக் காற்றில் பரவும்
விஷ வைரஸின் பீதியில்
உயிர் அச்சத்தில் தேசத்தால் துரத்தப்பட்ட அகதியானவனின் பரிதாபம்.

எவனொருவனின்
அகதி அட்டையில்அடையாளப்படுத்தி
வேதனம் தேடியவனின்
பெரும் நகரம்
ஆளவரமற்று தனித்துக் கிடக்கிறது.

கை குலுக்குளுடன்
வணக்கத்துக்குரிய நல விசாரிப்பில்
கஃபே தந்து
சமையலறை திறந்து விடும்
உபசரிப்பு பெண் புன்னகையில்
கணத்திற்கு கணம் மகிழுறும் மனம்.

பொழுதெல்லாம்
பாத்திரங்கள் கழுவுதல்
மீன், இறைச்சி,காய்கறிகள் வெட்டுதல்,
தளபாடங்கள் துடைத்தல்
இடையிடையே
யார் யாரோ
கடுங் வார்த்தைகளில் அவமானத்தால் நொந்து
திரித்து மௌனம் கொள்ளுதல்

இலக்கிற்கு
சலிப்புத் தன்மை
காலத்தின் கட்டாய நிலைமை.

வாழவொன்றுக்காக
பத்தடி நிலத்துள்
பல மைல்கள் தூரத்தை
ஓய்வின்றி கால்களால் மிதித்து திரிதல்.

ஒரு நாள் முடிவில் விடைபெறும் தருணம்
ஒரு குவளை சிவப்பு வைனும்,
ஒரு துண்டு நீள் பாணும்
முகம் மலர்ந்த முதலாளி நன்றியும்
அடிமைத்தனத்தின் எழுதப்படாத குறியீடு.

வலி தந்து போகும் வேலைப்பளுவிலும்
மாதக் கடைசியில் வட்டி போக
எஞ்சிக் கிடைக்கும் யூரோக்களை
தாயகம்  அனுப்பி வைக்க
மரணமற்ற காலம் திரும்புமா?

கோ.நாதன்
15.03.2020