16 அமைச்சுகளுக்கு மாத்திரமான நிதி ஒதுக்கீடு சட்டத்துக்கு முரணானது- சம்பிக்க

306 0

நிதியமைச்சின் செயலாளரினால் 16 அமைச்சுகளுக்கும் நிதி ஒதுக்கி வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் , அரசியலமைப்பிற்கு முரணானதென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தைக் கூட்டி தேவைகளை நிறைவேற்றுவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளோம். ஆனால் அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம்.

மேலும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை காரணம் காட்டி அரசாங்கம் அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதமே இந்த வைரஸ் பரவ ஆரம்பித்தது.  ஜனவரி மாதம் முதல் ஏனைய நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

எனினும் அரசாங்கம் அப்போது எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை” என குற்றம் சுமத்தியுள்ளார்.