கரோனா தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பயணங்களை தவிர்க்கவேண்டும், பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வேண்டுகோள்களை பொதுமக்கள் கடைபிடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்:
பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்கவும்.
* கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும்.
* பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும்,
* கைகளை சுத்தம் செய்யாமல், முகத்தை தொட வேண்டாம்.
* பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும்.
* கரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால்தான் வெற்றிபெற இயலும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடவேண்டும், நோய்க்கான அறிகுறி உள்ளவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகவும்.
இவ்வாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

