ஒரு ஆசனம்தான் கிடைக்குமென்றால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாராம் டக்ளஸ்

323 0

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தால் அடுத்த ஐந்து வருடத்தின் பின்னர் ஓய்வு பெறவுள்ளதாகவும் பின்னர் அரசியல் செய்யப்போவதில்லை என டக்ளஸ்  தெரிவித்துள்ளார்.

அம்பாறை, கல்முனையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இக்கருத்தினை முன்வைத்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ஐக்கியம் பற்றிப் பேச்சு மாத்திரம் இறுதிவரை இருக்கின்றது. செயல்வடிவம் கொடுப்பது பற்றி பேச வேண்டும். நாங்கள் தயாராக இருக்கின்றோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது போல இருக்க வேண்டும்.

மக்களுக்கு தேசிய நல்லிணக்கம் அவசியமில்லாமல் எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. நாங்கள் கட்சி சார்ந்து இருந்தாலும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வுக்கு எம்மால் முடியும்.

அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதைப் போன்று எங்களுக்கு 5 ஆசனம் இருந்தால் போதும். அதனால்தான் மக்கள் ஆணையைப் பெறுவதற்காக வடக்கு கிழக்கில் தனித்துப் போட்டியிடுகிறோம். அத்துடன் பழிவாங்கும் எண்ணம் இருக்குமானால் நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை. நாங்கள் அன்று என்ன சொன்னோமோ அதுதான் இன்று நடந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.