ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நோக்கத்தில் ரெயில், விமானங்களில் பலர் டிக்கெட் முன்பதிவு செய்ததால், அந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்பப் பெறுவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கான மாற்று நோட்டுகளை, வங்கிகளில் நீண்டநேரம் வரிசையில் நிற்காமல் எளிதாக பெறுவதற்கான வழிகளை சிலர் யோசித்து செயல்பட்டனர்.அது எப்படி என்றால், விமானம், ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பின்னர் அதை ரத்து செய்துவிட்டு, அதற்கான தொகையை பணமாகப் பெற்றுக்கொள்வதுதான்.
இதை உடனடியாக உணர்ந்து கொண்ட ரெயில்வே நிர்வாகம், ஏ.சி. பெட்டிகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் முன்பதிவு செய்வதை கண்காணித்து வருகிறது. அதோடு, முன்பதிவு பணத்தை திரும்பப் பெறுவதிலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, முன்பதிவுத் தொகை ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், அதைப் பணமாக திருப்பித்தர அனுமதிக்கவில்லை.
இந்த திருத்தப்பட்ட திட்டத்தின்படி, இந்த மாதம் 9, 10, 11-ந்தேதிகளில் காத்திருப்போர் பட்டியலில் இருந்து ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான திருப்பித் தரவேண்டிய தொகை ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தால், காசோலை அல்லது மின்னணு மாற்று மூலம் திருப்பித்தர ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
முன்பதிவுக்காக ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று மக்கள் மீது பரிதாபப்பட்டு, முன்பதிவு ‘கவுண்ட்டர்’களுக்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி கொடுத்திருந்தது. ஆனால், கடந்த 2 நாட்களாக டிக்கெட் முன்பதிவில் இயல்பைவிட எண்ணிக்கை மிகவும் அதிகரித்தது. எனவேதான் பணத்தை திருப்பித் தருவதில் இந்த திருத்தப்பட்ட திட்டம் கொண்டுவரப்பட்டது.
கணக்கில் காட்டப்படாத பணத்தின் மூலம் உயர் வகுப்பு இருக்கைகளை முகவர்கள் முன்பதிவு செய்வதை தடுப்பதற்காக, காத்திருப்போர் பட்டியலில் முன்பதிவு செய்வதை 10 மற்றும் 11-ந்தேதிகளில் மேற்கு ரெயில்வே நிறுத்தி இருந்ததாகவும் தகவல்கள் வந்தன. பின்னர் டிக்கெட் ரத்து மற்றும் பணத்தை திருப்பித் தருவதில் திருத்தப்பட்ட திட்டத்தை இந்திய ரெயில்வே கொண்டுவந்த பிறகே முன்பதிவு மீண்டும் அனுமதிக்கப்பட்டது.
ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு விவரங்களைப் பார்த்தால் நிச்சயம் தலை கிறுகிறுத்துவிடும். அதாவது, நவம்பர் 9-ந் தேதியன்று ஏ.சி. முதல் வகுப்புக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களின் எண்ணிக்கை 27 ஆயிரமாகும்.
ஆனால் அதற்கு முந்தைய நாளான 8-ந் தேதியன்று வெறும் 2 ஆயிரத்து 200 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு ஆகியிருந்தன. பிரதமரின் அறிவிப்பு வெளியான ஒரு நாளிலேயே முன்பதிவின் எண்ணிக்கை ஆயிரம் மடங்கு உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.அதுபோல், ஏ.சி. 2 அடுக்கு இருக்கைக்கான முன்பதிவும் ஒரே நாளில் 80 சதவீதம் உயர்ந்தது. ஏ.சி. 3 அடுக்கு இருக்கைக்கான முன்பதிவிலும் கணிசமான உயர்வு காணப்பட்டது.
இதனால் நவம்பர் 9-ந் தேதியன்று ரூ.24 கோடி அளவுக்கு வசூல் வந்தது. இ.டிக்கெட் மூலம் ரூ.10 கோடி அளவுக்கு டிக்கெட் விற்பனை ஆனது. சென்னை, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களில் ரெயில்வே கையாளும் பணத்தின் அளவு 50 சதவீதம் உயர்ந்தது.
ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தாலும், விமானம், ரெயில்வே, அரசு பஸ் போன்றவற்றின் ‘டிக்கெட் கவுண்ட்டர்’களில் அவற்றை மத்திய அரசு அனுமதித்திருந்தது.ஆனால், கணக்கில் காட்டப்படாத பணத்தை கணக்கில் கொண்டு வரும் வகையில் மாற்றிக்கொள்வதற்காக, விமான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படுவதை உணர்ந்த விமான போக்குவரத்து நிறுவனங்கள், இதுகுறித்து மத்திய அரசிடம் முறையிட்டன.
முன்பதிவு செய்துவிட்டு பின்னர் அந்த டிக்கெட்களை ரத்து செய்துவிட்டால், “ரீபண்டு” என்ற வகையில் அதை கணக்கில் காட்டிய பணமாக மீட்டுக்கொள்ள இந்த திட்டம் வசதியாக இருப்பதை அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டின.ஆனாலும் எந்த உத்தரவும் வராத நிலையில் சில முடிவுகளை குறிப்பிட்ட சில விமான போக்குவரத்து நிறுவனங்கள் எடுத்தன. அதன்படி கடந்த 48 மணி நேரத்தில் பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் முன்பதிவு செய்த டிக்கெட்கள் ரத்து செய்யப்படாது என்றும் பணமும் திருப்பித் தரப்படாது என்றும் அறிவித்தன.
பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகு ஏற்பட்ட இயல்புக்கு மாறான முன்பதிவு எண்ணிக்கை உயர்வு ஏற்பட்டதை விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.